சென்னை: மதுபானக் கொள்கை 2021-2022-இல் ஊழல் நடைபெற்றிருப்பதாகவும், ரூபாய் 100 கோடி சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க, கடந்த நவம்பர் மாதம் முதல் 9 முறை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து, கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இதையடுத்து, அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை, அவரது இல்லத்தில் நேற்று (மார்ச் 21) இரவு 9.15 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்ட அமைச்சர்களையும் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா கைது? இந்தியாவில் முதலமைச்சராக உள்ள ஒருவர் கைது செய்யப்படுவது இதுதான் முதன்முறையா என்றால், ஆம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, கிராம பஞ்சாயத்துகளுக்கு 45 ஆயிரம் தொலைக்காட்சி பெட்டி வாங்கியதில் ஊழல் செய்ததாக 1996ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர், ஜெயலலிதாவுக்கு இந்த ஊழலில் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
பின்னர், கடந்த 1991-1996ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த காலத்தில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், 18 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு 2014ஆம் ஆண்டு ஜெயலலிதாவிற்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
முதலமைச்சராக இருந்த போதும், நீதிமன்ற தீர்ப்பில் தண்டனை விதிக்கப்பட்ட பின்னரே சிறைக்கு அனுப்பப்பட்டார். அதனால், காவல்துறையால் நேரடியாக கைது செய்யப்பட்ட முதலைச்சர் எனக் கூற முடியாது. தண்டனை விதிக்கப்பட்டதால் சிறைக்கு அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறுகையில், “ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போதும் காவல்துறையால் எந்த வழக்கிலும் கைது செய்யப்படவில்லை. நீதிமன்ற விசாரணைக்குப் பின் தண்டனை விதிக்கப்பட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதனால், காவல்துறையால் கைது செய்யப்பட்ட முதலமைச்சர் என ஜெயலலிதாவை குறிப்பிட முடியாது. நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டு, சிறைக்கு செல்வதை கைது செய்யப்பட்டதாக கூற முடியாது” என தெரிவித்தார்.
மேலும், இது குறித்து சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கூறும்போது, “இந்தியாவில் காவல்துறையால் கைது செய்யப்பட்ட முதல் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தான். பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட்டுள்ளதால், முதலமைச்சராக இனி தொடர முடியாது. ஆனால், சட்டமன்ற உறுப்பினராக தொடர எந்த தடையும் இல்லை.
மேலும், இலாகா இல்லாத அமைச்சராகவும் தொடர முடியாது. ஏனெனில், மற்ற அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரத்தில் உள்ள முதலமைச்சருக்கு தனிப்பட்ட இலாகா இல்லை. இலாகா ஏதும் இல்லாததால், இலாகா இல்லாத அமைச்சாராகவும் சிறையில் இருக்கும் போது நீடிக்க முடியாது. நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டால், மீண்டும் அரவிந்த கெஜ்ரிவால் முதலமைச்சராக பொறுப்பேற்கவும் அரசியலைப்பு அதிகாரம் வழங்குகிறது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவால் கைது; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு வாபஸ்.. 10 நாட்கள் காவல்! - Kejriwal With Draws Plea From SC