திண்டுக்கல்: விழுப்புரம் மாவட்டம் மேலச்சேரி மதுரா இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் ரேணுகா - பார்த்திபன் தம்பதியினர். ரேணுகாவின் கணவர், தந்தை நாகப்பன் மற்றும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்ட 6 பேர் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்து உள்ளனர். இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள நரிக்கல்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆர்.சி செங்கல் சூளை சேம்பரில் வேலைக்கு சேர்ந்துள்ளனர்.
நாளொன்றுக்கு 800 ரூபாய் வரை சம்பளம் வீதம் கணவன், மனைவி இருவரும் உறவினர்களுடன் வேலைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் செங்கல் சூளையில் வேலைப் பார்க்கும் ரேணுகாவின் உறவினர் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ஊருக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
ஊருக்குச் சென்றவர் ஒரு வாரமாக செங்கல் சூளைக்கு வேலைக்கு திரும்ப வரவில்லை என்றும் உடனடியாக அவர் வேலைக்கு வரவில்லை என்றால் உங்களை பண்ணை வீட்டில் அடைத்து வைத்து சித்திரவதை செய்வோம் என்றும் கூறி செங்கல் சூளை உரிமையாளர் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும், செங்கல் சூளையில் பணியாற்றும் அஜித், சாரதி என்பவர்களை வைத்து செங்கல் சூளை உரிமையாளர், ரேணுகா மற்றும் அவரது கணவனை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ரேணுகாவின் முகத்தில் படுகாயம் அடைந்ததில் கண் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சூளை உரிமையாளர்கள் உள்ளிட்டோர் தாக்கியதில் பார்த்திபனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து ரேணுகா மற்றும் அவரது கணவன் இணைந்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ இணையத்தில் பரவப்பட்ட நிலையில், கொத்தடிமைகள் மீட்பு குழுவை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர் இவர்களை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளார்.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரேணுகாவை நேரில் பார்க்க வந்த செங்கல் சூளை உரிமையாளர் விரைவில் பணிக்கு வருமாறும், இல்லையென்றால் பண்ணை வீட்டில் வைத்து மீண்டும் சித்தரவதை செய்வோம் என்றும் மிரட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக சாமிநாதபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழக அரசின் உரை புறக்கணிப்பா..? ஆளுநர் மாளிகையின் விளக்கம் என்ன?