செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு சர்வதேச மூன்றாவது காத்தாடி திருவிழா நேற்று வெகு விமரிசையாக துவங்கியது. வரும் 18ஆம் தேதி வரை என நான்கு நாட்கள் நடைபெறும் இவ்விழாவினை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் முன்னிலையில், தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் குளோபல் மீடியா பாக்ஸ் இணைந்து நடத்தும் விழாவில் தொழில் முறை பட்டம் பறக்கவிடும் வீரர்களால் பட்டம் பறக்க விடப்பட்டது. இதில் இந்தியா உள்பட பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களது காத்தாடிகளை காட்சிப்படுத்தினர்.
அழகிய வண்ணங்களில் நுணுக்கமான வடிவமைப்புகளுடன் அமைக்கப்பட்டிருந்த டால்பின் மீன்கள், ஆமை, டிராகன்கள், கம்பீரமான சுறாக்கள், காளை மாடுகள், விசித்திரமான ராட்சத காத்தாடிகள் காண்போரை வியக்க வைத்தது. இந்த காத்தாடி திருவிழாவை காண்பதற்கு 12 வயதுக்குள் இருப்பவர்களுக்கு இலவசமாகவும், 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு நபர் ஒருவருக்கு 200 ரூபாய்க்கும் டிக்கெட் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற விழாவில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு காற்றாடிகளை கண்டு ரசித்தனர். மேலும் கடந்த ஆண்டு இந்த திருவிழா பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற நிலையில், இந்த ஆண்டு குறைந்தபட்சம் 40 ஆயிரம் பார்வையாளர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் விடுமுறை என்பதால் இதைவிட கூடுதலான பார்வையாளர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
எனவே, கோவளம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளை திருவிடந்தை வரை இயக்க வேண்டும் காற்றாடி ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் கூறுகையில், மூன்றாவது ஆண்டாக சர்வதேச பட்டம் விடும் விழா திருவிடந்தை பகுதியில் உள்ள கடற்கரையில் 4 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இவ்விழா நடத்தப்பட்டது. அப்போது 150 காற்றாடிகள் பறக்கவிடப்பட்டன. இம்முறை 250 காற்றாடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன. கடந்த 2022இல் நடைபெற்ற விழாவிற்கு 15 ஆயிரம் பேரும் 2023இல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேரும் கலந்து கொண்டனர். இம்முறை தொடர் விடுமுறை காரணமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வாரிகள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பாட்டு கச்சேரி நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார். இந்த விழாவில் சுற்றுலாத்துறை இயக்குநர் சமயமூர்த்தி, சுற்றுலாத்துறை செயலாளர் சந்திரமோகன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “எங்களுக்கு தெரியாமல் அன்புமணிக்கு மட்டும் எப்படி தெரிந்தது?”.. அமைச்சர் சிவசங்கர் கேள்வி! - Minister Sivasankar on Mini Bus