சென்னை: இந்தியாவில் உள்ள கடல் வளங்களைக் கொண்டு நீல பொருளாதாரம் வளர்ச்சியினை மேம்படுத்துவதையும் கடல் வளத்தைப் பாதுகாக்கவும் வரும் 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை, சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப கழகம் மற்றும் சர்வதேச பெருங்கடல் அறிவியல் காங்கிரஸ் ஆகியவை இணைந்து நீல பொருளாதாரத்தில் பெருங்கடலின் நிலையான பயன்பாடுகள் என்ற கருத்துடன் சர்வதேச அளவிலான கருத்தரங்கை நடத்துகிறது.
இது குறித்து தேசிய பெருங்கடல் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, "இந்தியா 7500 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையையும் கடல் வளங்களையும் கொண்டுள்ளது. ஆகவே, நீல பொருளாதாரத்திற்கான நீண்ட கால திட்டங்கள்; பொருளாதார வளர்ச்சிக்கு கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துதல்; கடல் சுற்றுச்சூழல் அமைப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்; மேம்பட்ட வாழ்வாதாரங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவற்றைத் திட்டமிடப்பட வேண்டும்.
இதற்காக பிப்ரவரி 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நீல பொருளாதாரத்தில் பெருங்கடலின் நிலையான பயன்பாடு என்ற மையப் கருத்துடன் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கில், கடல் வளங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் மற்றும் சவால்களைத் தணிக்கும் காலநிலை மாற்றம்; பாதுகாப்பு உறுதி செய்தல்; தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல்; சிறந்த எதிர்காலத்திற்காகக் கடலோர சமூகங்களை ஒன்றிணைத்தல்; வளர்ந்து வரும் புவிசார் அறிவியல் சவால்களின் பின்னணியின் கொள்கையில் மற்றும் அதன் தேவைகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளன.
இதுமட்டும் அல்லாது இந்த கருத்தரங்கில், கடல் துறை சார்ந்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டு விரிவான பதிவுகளை மேற்கொள்கின்றனர். மேலும், பெருங்கடல் உச்சி மாநாட்டில் சர்வதேச நாடுகள் மற்றும் இந்தியாவின் கடலோர மாநிலங்களில் இருந்து மீனவர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், கடல் சார் ஆராய்ச்சி மற்றும் கடல் வளங்கள் குறித்த கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில், கடல் ஆய்வு; கடலில் உள்ள வளங்கள்; இந்தியாவின் கடல்சார் வரலாறு உள்ளிட்ட கடல் தொடர்பான பல்வேறு தளங்களில் தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்களைக் காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.
சர்வதேச பெருங்கடல் ஆராய்ச்சி மாநாடு இதுவரை இரண்டு முறை நடைபெற்றுள்ளது. மூன்றாவது முறையாகச் சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள். பல்வேறு விவாதங்களில் இருந்து கடல் சார்ந்த தொழில்துறை குறித்த கொள்கையில் உருவாக்கப்படும்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை ஐஐடி வரலாறு காணாத சாதனை.. 2023-ல் 300 காப்புரிமைகளைப் பெற்றது எப்படி?