சென்னை: மோசமான வானிலைக்கு இடையே சூறைகாற்றில் நிலைதடுமாறியவாறு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற பயணிகள் விமானம், கடைசி நிமிடத்தில் மீண்டும் மேலேழுப்பி செல்லும் பதைபதைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த நிலையில் இந்நிகழ்வு குறித்து இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலின் விளைவாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (நவ.30) அதிகாலை முதல் மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னை விமான நிலையம் நேற்று முற்பகல் 12:30 மணி முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மாலை முதல் மழை படிப்படியாக குறைந்தபின் இன்று (டிச.1) அதிகாலை 1 மணி முதல் விமான நிலையம் மீண்டும் செயல்பட துவங்கியது.
இதனிடையே நேற்று (நவ.30) மும்பையில் இருந்து 124 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ பயணிகள் விமானம் (6E 683), மோசமான வானிலைக்கு இடையே சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது காற்றின் வேகம் காரணமாக விமானம் கிடைமட்டமாக அலைபாய்ந்தபடி ஓடுபாதை நோக்கி இறங்கயது. பின் மீண்டும் மேல்யெழும்பி வானில் பறக்க தொடங்கியது. இந்த வீடியோ சமூக வளைதளத்தில் பரவி பெரும் பேசுப்பொருளாக மாறியது.
இந்நிலையில் இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரி தரப்பில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்தின் விளக்கமளித்துள்ளனர். அதில், மும்பையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க வந்தபோது பலத்த காற்று வீசியதால், ஓடு பாதையை தொட்ட பொழுது விமானம் பயங்கரமாக குலுங்கியது. அதனால், ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் மீண்டும் விமானத்தை மேலே எழுப்பி பறக்க தொடங்கினார் விமானி.
இதையும் படிங்க: புயல் ஓய்ந்தும் ஓயாத கனமழை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
அப்போது அந்த விமானம் குலுங்கிக் கொண்டு சாய்ந்தவாறு வானில் பறந்தது. அதன் பின்பு விமானம் விமான நிலைய அதிகாரிகள் அறிவுறுத்தலின் பேரில் ஹைதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பான முறையில் தரையிறங்கியது” என்றனர். இதுகுறித்து ஈடிவி பாரத் இண்டிகோ ஏர்லைன்ஸ் தொடர்பு கொண்டபோது விமான நிலைய அதிகாரிகள் விளக்கமளிக்க மறுத்தனர்.
முன்னதாக, ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய மற்றும் சென்னைக்கு வரவேண்டிய விமானங்கள் என மொத்தம் 200-க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்னை விமான நிலையத்திலேயே 8 முதல் 10 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.