வேலூர்: 18வது மக்களவை விரைவில் கூட உள்ளது. அதில் புதிய மக்களவை உறுப்பினர்கள் பதவியேற்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகம் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை அகற்றப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து வேலூர், அண்ணா கலையரங்கம் அருகே இந்திய குடியரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்த அம்பேத்கரின் சிலையை அப்புறப்படுத்திய மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் செ.கு.தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அம்பேத்கர் சிலையை அகற்றிய மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செ.கு.தமிழரசன், "ஜனநாயகத்தின் மகுடமாக இருக்கக்கூடிய அம்பேத்கர் சிலையை அறிவிப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு அகற்றி உள்ளது.
அம்பேத்கர் சிலை அகற்றியதை இந்த அரசு மிகவும் ரகசியமாகசெய்துள்ளது. இனிமேல் இந்தியாவை பீம் தர்மம் ஆளும் பீம் தர்மத்தை அழிக்க வேண்டும் என்பதற்காக மோடி இவ்வாறு செய்துள்ளார். மீண்டும் சிலையை அதே இடத்தில் நிறுவ வேண்டும், இந்த நாடு காவிமயமாக மாற வேண்டும் என்பது பாஜகவின் எண்ணம்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தது போன்று, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அதிமுகவை ஆதரிக்கிறோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சி தொண்டர்களும் நினைப்பது மறைக்கப்படாத உண்மையாகும்" எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பக்ரீத் பண்டிகை: ரூ.1 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை; வேலூர் விவசாயிகள் மகிழ்ச்சி! - KV Kuppam Goat Market