சென்னை: தென்மேற்கு வங்க கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளது. இது சென்னைக்கு தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 490 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 410 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கு திசையில் 320 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையிலிருந்து கிழக்கு வட கிழக்கு திசையில் 100 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக் கரையை ஒட்டி அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. அதன்பிறகு, இது தொடர்ந்து வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே வடக்கு தமிழ்நாடு-புதுச்சேரி கடற்கரையை நவம்பர் 30ஆம் தேதி காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 50 மூலம் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் கடந்த மூன்று நாட்களாக குறைந்திருக்கிறது. குறிப்பாக நேற்று அது ஒரே இடத்தில் நிலை கொண்டிருந்தது. எனவேதான், மழையின் அளவு குறைவாக பெய்தது மற்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு திரும்பப்பெறப்பட்டது.
இதையும் படிங்க: ஃபெங்கல் புயல் முன்னெச்சரிக்கை; தஞ்சையில் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர்!
மேலும், வங்க கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சுற்றி உள்ள மேகங்களை இழுத்துக்கொண்டு இன்று மாலை தற்காலிகமாக புயலாக மாறும். இதன் விளைவாக இன்று இரவு முதல் தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரிக்கும்.
காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும்போது இதன் காற்றின் வேகம் 30 கிலோ மீட்டர் அளவில் இருக்கும். இதுவே 31 முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்றின் வேகம் அதிகரித்தால் அது லேசான புயல் என்றும், வேகம் 51 முதல் 100 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கும் போது புயலாகவும் கருதப்படுகிறது.
அதேபோல, காற்றின் வேகம் அதிகரிக்கும் பட்சத்தில் அது தீவிர புயலாக கருதப்படுகிறது. ஆனால், தற்போது வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் வேகம் 30 முதல் 35 கிலோ மீட்டர் வரை மட்டுமே இருக்கிறது. எனவே, தற்காலிக புயலாக இது உருவெடுத்து மீண்டும் வலுவிழந்து 30ம் தேதி காலை மகாபலிபுரத்திற்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும்" என்று பாலசந்திரன் கூறியுள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்