தூத்துக்குடி: 2024-ம் ஆண்டிற்காக 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸிஸ் ஜூன் 2 முதல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை, இங்கிலாந்து, மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 20 அணிகள் கலந்து கொள்கின்றன.
இவை 4 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் கனடா, அயர்லாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகியவை A பிரிவில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 27 நாள்கள் நடைபெறும் இந்த தொடரில் 55 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
ஜூன் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள தொடரின் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா - கனடா அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 5-ம் தேதி அயர்லாந்தை சந்திக்கிறது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரரும் தமிழக அணியின் நட்சத்திர வீரருமான சாய் சுதர்சன் உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடிக் கோப்பை வெல்ல வேண்டும் என சாய் சுதர்சன் சிறப்பு வழிபாடு செய்தார். முகக்கவசம் அணிந்தபடி குடும்பத்துடன் கோயிலுக்கு வந்த அவர் கோயிலில் மூலவர், சண்முகர், தட்சணாமூர்த்தி வள்ளி, தெய்வானை மற்றும் சூரசம்ஹார மூர்த்தி, பெருமாள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
அப்போது கோயிலில் மூலவர் சன்னதியில் அமர்ந்து தரிசனம் செய்த அவரை அடையாளம் கண்டுகொண்ட கோயில் அர்ச்சர்களிடம் இந்திய அணி உலகக்கோப்பையை நிச்சயம் வெல்லும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து கோயிலில் தரிசனம் முடித்து வெளியே வந்த அவரிடம் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
குஜராத் டைட்டஸ் அணிக்காகக் கடந்த 3 ஐபிஎல் தொடர்களில் விளையாடிவரும் சாய் சுதர்சன் நடப்பு ஐபிஎல் தொடரில் 12 போட்டிகளில் விளையாடி, 1 சதம் 2 அரைசதம் உட்பட 527 ரன்களை குவித்து அசத்தினார். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாள்களில் தொடங்கப்படவுள்ள நிலையில் இந்திய அணி கோப்பையை வெல்ல வேண்டும் என தரிசனம் செய்து வழிபாடு நடத்தியது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரூரில் விறுவிறுப்பாக நடந்து வந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டி நிறைவு!