மயிலாடுதுறை: மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் மொத்தம் 15,45,568 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் அஞ்சல் வாக்குகளையும் சேர்த்து 10,88,182 பேர் வாக்களித்தனர். இத்தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சுதா 5,18,459 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் பாபுவை விட 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதிமுக வேட்பாளர் பாபு 2,47,276 வாக்குகள், பாமக வேட்பாளர் ம.க.ஸ்டாலின் 1,66,271 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் 1,27,642 வாக்குகள் பெற்று அடுத்தடுத்த இடத்தை பிடித்தனர். 8,695 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே முன்னணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் சுதா 2,71,183 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.பி.மகாபாரதி, தேர்தல் பொது பார்வையாளர் கன்ஹீராஜ் ஹச் பகதே முன்னிலையில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை வழங்கினார். அப்போது, அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், எம்.எல்.ஏக்கள் நிவேதா எம்.முருகன், எஸ்.ராஜ்குமார், எம்பிக்கள் ராமலிங்கம், கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து, வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சுதா, அமைச்சர் உள்ளிட்ட திமுக மற்றும் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சூழ திறந்தவெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், “மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இந்தியா கூட்டணி பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோன். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னது போல் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளோம்.
இது ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி. கருத்து கணிப்புகள் எப்படி பொய்யாகியுள்ளது என்பதை பார்த்து இருப்பீர்கள். இந்தியா முழுவதும் ராகுல் காந்தி மேற்கொண்ட நடைபயணமான 'பாரத் ஜோடோ நியாய யாத்திரையின்' வெளிப்பாடு மக்கள் அனைவரும் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உள்ளனர். அதேபோல், பிரதமர் மோடி ஆட்சி அமைப்பார் என்பது பகல் கனவாகும். வாக்கு எண்ணிக்கையின் போது முதல் 3 சுற்றுகளில் பின்னடைவைச் சந்தித்தார் மோடி. இது அவர் பிம்பத்திற்கு கொடுத்த அடியாகா நான் பார்க்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: தனி சின்னத்தில் வெற்றி...அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக உருவெடுக்கும் விசிக..!