திருவண்ணாமலை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், பணப் பட்டுவாடா நடைபெறுவதைத் தடுக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், அரசு ஒப்பந்ததாரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்படப் பல இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், ஆரணி அருகே உள்ள களம்பூரில் சுமார் 150க்கும் மேற்பட்ட அரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அரிசி ஆலைகளில், தேர்தலுக்காக பணம் மற்றும் ஆவணங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, புகாரின் பேரில் சென்னை வருமானவரி துறை இணை இயக்குநர் தலைமையில் சென்னை, திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் இருந்து சுமார் 24 அதிகாரிகள் 6 கார்களில் விரைந்து களம்பூரில் உள்ள அரிசி ஆலைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும், களம்பூர் ஆரணி திருவண்ணாமலை சாலையில் உள்ள எஸ்.பி.எஸ் அரிசி ஆலையில் வருமானவரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து களம்பூர் சந்தவாசல் சாலையில் உள்ள ஸ்ரீபாலாஜி மாடர்ன் அரிசி ஆலை உள்ளிட்ட 5 அரிசி ஆலைகளில் வருமான வரி அதிகாரிகள் மற்றும் பறக்கும் படையினர் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர். நடைபெற்ற சோதனையில், பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரி துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 11ம் தேதி, நீலகிரியில் உள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகி வீட்டில் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.