சென்னை: 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.00 மணி முதல் தொடங்கி ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஓய்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், தீவிரமான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதனையொட்டி, தமிழ்நாடு முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்டப் பொதுமக்கள் அனைவரும் காலை முதல் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.
இதற்காக நீண்ட நேரமாக தங்களுக்கான வாக்கு மையங்களில் நீண்ட வரிசையில் பொறுமையாக காத்திருந்து ஓட்டுப் போட்டனர். இதற்கிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஓட்டுப் போடாமல் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் குடிநீரில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடிக்கத் தவறியதாக தமிழ்நாடு அரசைக் கண்டித்து தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதியினர் அறிவித்திருந்தனர்.
மக்கள் குடிக்கும் குடிநீரில் மனித மலத்தை கலந்த கொடூரம் நடந்து 15 மாதங்களை எட்டிய நிலையிலும், இதுவரை இவ்விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி பொதுமக்கள், நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யும் வரை நாங்கள் தேர்தலில் வாக்களிக்க மாட்டோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஒருவர் கூட வாக்குச்சாவடி பக்கம் கூட வரவில்லை. இதனால், அப்பகுதியில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஏகனாபுரம் கிராமத்தில் பொதுமக்கள் வாக்களிக்க வராமல் தேர்தலை புறக்கணித்துள்ளனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு கட்டப் போராட்டம் நடத்தி வந்த ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் என அனைவரும் வாக்களிக்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், அப்பகுதியில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளன.
இதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதிக்குட்பட்ட வலிய ஏலா கிராமத்தில் 80 வருடங்களாக அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை எனக் கூறி, தேர்தலை புறக்கணித்துள்ளனர். மேலும், 500-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் 'கஞ்சி காய்ச்சும்' போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளன.
இதேபோல, திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி பள்ளிப்பட்டு அருகே 6 வழிச்சாலைக்காக கோயில்களை இடிப்பதைக் கண்டித்து திருத்தணி சட்டமன்ற தொகுதி பள்ளிப்பட்டு வட்டம் குமாரராஜிப்பேட்டை கிராமத்தில் 34, 35 ஆகிய இரண்டு வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்கள் ஓட்டுப் போடாமல் முழுமையாக தேர்தலை புறக்கணித்துள்ளனர். இந்த இரண்டு ஓட்டுச்சாவடி மையத்தில் இந்த கிராமத்தில் 952 ஓட்டுகள் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள இந்த கிராமமக்கள் வழிபடும் அருள்மிகு பொன்னியம்மன் மற்றும் கொல்லாபுரி அம்மன் திருக்கோயில்கள் முழுமையாக இடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளன.
ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உள்ள பூத் 292-ல் தற்போது வரை பொதுமக்கள் மூவர் மட்டுமே வாக்களித்துள்ளனர். அவளூர் கிராமத்தில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், அவளூரில் மேம்பாலம் கேட்டு தேர்தலை ஊர்மக்கள் புறக்கணித்து வருவதால் தற்போது வரை பொதுமக்கள் மூவர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இங்கு இதுவரையில் 13 வரை மட்டுமே வாக்களித்துள்ளனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி சித்தேரி ஊராட்சியில் தேர்தல் அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்து தனி வாக்குச்சாவடி மையம் அமைக்காததால் 547 வாக்காளர்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல, திண்டிவனம் சட்டமன்ற தொகுதி நடுக்குப்பம் ஊராட்சியில் திரௌபதி அம்மன் கோயில் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்காததால் 1792 வாக்காளர்கள் தேர்தல் புறக்கணித்துள்ளனர். இதனால், அப்பகுதியில் வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே எலவடி ஊராட்சிக்குட்பட்ட பூசப்பாடி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரியும், அடிப்படை வசதிகள் செய்து தருதல் மற்றும் ஆதிதிராவிட மக்களுக்கு மனை பட்டா வழங்காததைக் கண்டித்து அந்தக் கிராமத்தினர் கருப்புக் கொடி ஏந்தி புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தக் கிராமத்தில் சுமாா் ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசிக்கும் இங்கு 'தனி ஊராட்சி'யாக இந்தக் கிராமத்தை அறிவிக்கக் கோரியும், ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்காதது, அடிப்படை வசதிகள் செய்யாததைக் கண்டித்தும் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் ஒரு பகுதியாக, மக்களவைத் தோ்தலை புறக்கணித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சட்டமன்ற தொகுதி எஸ்.ஏரிப்பாளையம் கிராமம், விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி விருத்தகிரி குப்பம் மற்றும் கட்சி பெருமாநத்தம் மூன்று கிராமங்களையும் தனி ஊராட்சியாக அறிவிக்க கோரியும், நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக மும்முடி சோழகன் கிராமத்திலும் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். இதில், எஸ்.ஏரிப்பாளையத்தில் ஏழு வாக்குகளும், விருதகிரி குப்பம் பகுதியில் 3 வாக்குகளும், பெரும்பான் நத்தம் வாக்குச்சாவடியில் 5 வாக்குகளும் பதிவாகியுள்ளன. மும்முடி சோழகன் கிராமத்தில் இதுவரை இரண்டு பேர் மட்டுமே வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வேங்கை வயலில் பதிவாகாத ஓட்டு.. பரந்தூர் பிரச்சனையால் ஏகனாபுரத்தில் வாக்குப்பதிவு மந்தம்! - Lok Sabha Election 2024