சென்னை: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, புறநோயாளிகள் பிரிவு நாளை பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது எனவும், புறநோயாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் அவசர வழக்காக இன்று (ஜனவரி 21) விசாரிக்க உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இந்தியா முழுவதும் உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு, திறப்பு விழாவுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில புதுச்சேரியில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனை சார்பில் மருத்துவமனை மூத்த நிர்வாக அதிகாரி ஹவா சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "ராமர் கோயில் திறப்பு விழா காரணமாக புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 22ஆம் தேதி பிற்பகல் 2.30 மணி வரை மூடப்படும் எனவும், அவசர பிரிவுகள் வழக்கம் போல தொடர்ந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள் ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையின் இந்த அறிவிப்புக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அவசர மனுவை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரதசக்ரவர்த்தி அடங்கிய அமர்வு, இன்று (ஜனவரி 21) காலை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
இதையும் படிங்க: 2019-ல் நடந்த கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை - கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு