திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே காரம்பாடு கிராமத்தில் உள்ள ஓடைக்கரை சுடலைமாடசாமி கோயில் கொடை விழா நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்றது. இவ்விழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
பின்னர், வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், ஒரு பிரிவைச் சேர்ந்த இளைஞர் கத்தியால் மற்றொரு பிரிவை சேர்ந்த மதிராஜா, மதியழகன் என்ற அண்ணன், தம்பியை குத்தி கொலை செய்துள்ளார். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு சகோதரர் மகேஷ்வரன் படுகாயம் அடைந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திசையன்விளை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது உயிரிழந்த மதிராஜா மற்றும் மதியழகன் ஆகியோரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய பருன் (வயது 27), ராஜ்குமார் (28), விபின் (27) ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், இக்கொலை குறித்து கொலை நடைபெற்ற இடம், கொடை விழா குழுவினர் வசிக்கும் திசையன்விளை, கக்கன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இருகுடும்பத்தினர் இடையே முன்பகையும், கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட பிரச்சனையும் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக தெரிகிறது. அதனால், கொலை குறித்து கொலை நடைபெற்ற இடம் மற்றும் கொடை விழா குழுவினர் வசிக்கும் திசையன்விளை கக்கன் நகர் பகுதிகளில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நெல்லையில் அதிகரிக்கும் கொலை சம்பவம்: தற்போது ஆடி மாதம் என்பதால் திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் கோயில் கொடை விழா தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட வாய் தகராறில் சகோதரர்கள் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் நெல்லையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரங்கேறும் கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 240 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆளில்லாத வீடுகள் தான் டார்கெட்.. வீடு புகுந்து கொள்ளையடிக்கும் பெண்கள்.. சத்தியமங்கலம் பகீர் சம்பவம்! - Sathyamangalam Robbery