புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே துவார் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் கிராம மக்கள் பயன்படுத்தி வந்த குளங்கள் முறையாக பராமரித்து கண்காணிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதுக்கோட்டை கறம்பக்குடி சாலை ஓரத்தில் துவார் கிராமத்தைச் சேர்ந்த கிராமப் புல எண்கள் 272/1, 257/2 என்ற பாப்பான் குளம் மற்றும் பறையன் குளத்தை 15 ஆண்டுகளாக தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து, எந்த ஒரு தடையுமின்றி நெல் மற்றும் தைல மரங்கள் வைத்து சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு கோட்டாட்சியரிடம் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து மனுவின் அடிப்படையில் குளம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அன்றிலிருந்து இன்று வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது சம்பந்தமாக கறம்பக்குடி அருகே குளந்திரான்பட்டு கிராமத்தைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலரான துரை குணா குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நடுக்குளத்துக்குள்ளே நடவு வயல் என்ற தலைப்பில் நூதன முறையில் சுவரொட்டியை ஒட்டி இன்று முதல் ரிசர்வேஷன் செய்யப்படும் என்று குறிப்பிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும், இந்த சுவரொட்டியில் கதை திரைக்கதை வட்டார வளர்ச்சி அலுவலர், பின்னணி இசை வருவாய் கோட்டாட்சியர், சண்டை பயிற்சி துரை குணா, வசனம் இயக்கம் வட்டாட்சியர், பாடல்கள் கிராம நிர்வாக அலுவலர், படத்தொகுப்பு மாவட்ட வருவாய் அலுவலர், ஒளிப்பதிவு வருவாய் ஆய்வாளர், நடனம் தலையாரி, தயாரிப்பு மேற்பார்வை மாவட்ட ஆட்சியர் என குறிப்பிட்டுள்ளது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பேசிய துரை குணா, "பாப்பான் குளம் மற்றும் பறையன் குளத்தை கடந்த 15 ஆண்டுகளாக எந்த வித தடயமும் இல்லாமல் சாகுபடி செய்வதாக தெரிவித்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், 2019ஆம் ஆண்டே இதுகுறித்து கோட்டாட்சியரிடம் புகார் அளித்த போது மறுநாளே அவர் வருவாய்த்துறையை விட்டு அளவீடு செய்து எல்லையை அளந்து காட்டிவிட்டுச் சென்றதாக தெரிவித்தார்.
அப்போதிலிருந்து நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை எனவும், நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். எனவே, இது சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் நோட்டீஸ் ஒட்டப்போவதாக கூறிய போதும் அவர்கள் அதை அலட்சிய போக்காக எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், இங்குள்ள கலெக்டர், கோட்டாச்சியர், விஏஓ ஆகியோர் நீர்நிலைகள், கனிம வளங்கள் மற்றும் அரசு சொத்துக்கள் ஆகியவற்றை பாதுகாக்காமல் அரசியல்வாதிகள், ஆளுங்கட்சிகள் மற்றும் எதிர்கட்சிகளுக்கு சலுகை அளித்து வருகிறார்கள்” எனக் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: காதல் திருமணத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்த அவலம்.. தாய் எஸ்பி அலுவலகத்தில் புகார்!