சென்னை: சென்னை கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தில் மருத்துவப் படிப்பிற்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மதியம் வந்த மாணவர் ஒருவர் தன்னுடைய பெயர் கலந்தாய்வு வரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளது, ஏன் தன்னை அழைக்கவில்லை என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் அதிகாரிகள் அந்த மாணவனிடம் இருந்த கலந்தாய்வு வரிசை பட்டியலை பார்த்தபோது போலியான கலந்தாய்வு வரிசை பட்டியல் வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மருத்துவ கல்வி அதிகாரிகள் இந்த மோசடி தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து அந்த மாணவனையும் அவரது தந்தையையும் ஒப்படைத்தனர்.
பின்னர் அவர்களிடம் கீழ்ப்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், போலியான ஆவணங்களை வைத்திருந்த மாணவன் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது நிரம்பியவர் என்பதும், இவர் சுங்குவார்சத்திரத்தில் பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, நீட் தேர்வில் 429 மதிப்பெண் பெற்றிருப்பது தெரிய வந்தது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் கம்ப்யூட்டர் சென்டர் வைத்திருக்கும் வெங்கடாஜலபதி என்பவரிடம் தரவரிசை பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 1.50 லட்சம் கொடுத்து பல நாட்களாக பட்டியலில் மாணவனின் பெயர் வராததால் பலமுறை வெங்கடாஜலபதியிடம் சென்று முறையிட்டுள்ளார். இதனால் வெங்கடாஜலபதி மாணவனுக்கு தெரியாமல், வேறொரு கலந்தாய்வு தரவரிசை பட்டியலை எடிட் செய்து இவரது பெயரை மோசடியாக சான்றிதழில் பதித்திருப்பது தெரிய வந்தது.
இந்த மோசடி சான்றிதழை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரக அலுவலகத்தில் சரிபார்த்தபோது இது போலியான கலந்தாய்வு தரவரிசை பட்டியல் என்பது தெரியவந்ததையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கம்ப்யூட்டர் சென்டரின் உரிமையாளர் பணம் பெற்றுக் கொண்டு இந்த மோசடி வேலையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்திருப்பதை அடுத்து, மாணவன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதே போல கம்ப்யூட்டர் சென்டர் வைத்து நடத்தும் அந்த நபர் எவ்வளவு மாணவரிடம் பணம் பெற்று இதேபோன்று போலியாக கொடுத்துள்ளார் என்ற கோணங்களில் கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: பொறியியல் கல்லூரி போலி பேராசிரியர்கள் பணிக்கு வருகிறது நிரந்தர தடை?