கோயம்புத்தூர்: 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், கோயம்புத்தூர் மாநகரம் தடாகம் சாலை சிவாஜி காலனி பகுதி மக்கள், "இந்த அரசு தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை, எனவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக" சாலையோரம் பேனர் வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சிவாஜி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில், "சிவாஜி காலனி பகுதிகளில் செளடாம்பிகா நகர், சிம்சன் நகர், பல வருடங்களாக ரோடு போட்டுத் தரவில்லை. சாக்கடை வசதியும் இல்லை. பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இன்று வரை ரோடு மற்றும் சாக்கடை வசதி செய்து தரவில்லை.
ஆகவே வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை நாங்கள் புறக்கணிக்கிறோம். யாருக்கும் ஓட்டு போட மாட்டோம் என உறுதி கூறுகிறோம்" என குறிப்பிட்டுள்ளனர். இந்த பேனர் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையின் நிறுவனத் தலைவரான வழக்கறிஞர் புஸ்பானந்தம், மற்றும் சிவாஜி காலனி விரிவாக்கம் குடியிருப்போர் நல சங்கத் தலைவர் நடராஜன் ஆகியோரால் வைக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதி கம்மாபுரம் அருகே பழைய விருத்தகிரி குப்பம் கிராம மக்களும், இது போன்று நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பேனர் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பயனாளிகள் ஆத்திரம்.. கோவையில் நடந்தது என்ன?