சென்னை: சென்னை பிராட்வேயில் இருந்து கேளம்பாக்கத்துக்கு இன்று காலை மாநகர பேருந்து சென்றுக்கொண்டிருந்தது. அடையாறு, எல்.பி சாலையில் பயணித்துக்கொண்டிருக்கும்போது பேருந்து திடீரென தீ பற்றி எரிந்தது. இது ஏசி பேருந்து என்பதால் அதில் 10 பயணிகள் வரை தான் இருந்துள்ளனர். இதனால் பஸ் தீப்பற்றியதை அறிந்த உடனே பேருந்து ஓட்டுநர் பயணிகள் அனைவரையும் வெளியேற்றியதால் நல்வாய்ப்பாக உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதனை பார்த்த சாலைவாசிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்த பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. இந்த சம்பவம் குறித்து அடையாறு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த பேருந்து தமிழக அரசின் தற்போதைய முடிவுபடி, டீசல் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் CNG கேதிவ் இயங்கும் வகை பேருந்தாகும். இந்நிலையில் எதனால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திடீரென அரசு மாநகரப் பேருந்து சாலையில் தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ பதிவு எண் TN-01AN-1569 கொண்ட பேருந்தை இன்று மதியம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இருவரும் தடம் எண் 102, பிராட்வே-லிருந்து 10 பயணிகளுடன் சிறுசேரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.அப்போது மதியம் சுமார் 2 மணி அளவில் அடையார் பணிமனை அருகில் பேருந்து செல்லும் போது ஓட்டுநர், என்ஜின் அருகே புகை வருவதை கவனித்ததால், உடனடியாக பேருந்தை நிறுத்தி, பயணிகளை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இறக்கிவிடப்பட்டனர்.
பின் காவல் துறை மற்றும் தீ அணைப்பு துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் உதவியுடன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டு அருகில் இருந்த அடையாறு பணிமனைக்கு பேருந்து பாதுகாப்பாக எடுத்துச்செல்லப்பட்டது. மாநகர் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு, பேருந்தில் இருந்த பயணிகளுக்கும், அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் துரித நடவடிக்கை மேற்கொண்டார்கள்.மேலும் இந்த பேருந்து இந்த ஆண்டின் ஜூன் மாதம்தான் டீசல் வகை எரிபொருளிலிருந்து CNG கேதிவ் மாற்றம் பெற்றது” என விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: சாலையில் நடந்து சென்ற டியூசன் டீச்சரிடம் செல்போன் பறிப்பு.. பார் தகராறு விவகாரத்தில் மர்ம மரணம்.. சென்னை குற்றச் செய்திகள்