சென்னை: உலக நாடுகளால் தடை செய்யப்பட்டுள்ள ஹிஸ்பு - உத் - தஹீர் என்ற அமைப்பிற்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல் சென்னை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி உள்ளிட்ட 11 இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
சென்னையில் திருவல்லிக்கேணி, வெட்டுவாங்கேணி, சிட்லபாக்கம், தாம்பரம், ராயப்பேட்டை, அதேபோல் கன்னியாகுமரி, புதுக்கோட்டை என மொத்தம் 11 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். முன்னதாக தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆட்களைச் சேர்த்தாக, சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஹமீது உசேன், அவரது மகன் உட்பட மொத்தம் 9 நபர்களை இதுவரை கைது செய்துள்ளனர்.
அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, இது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் தற்போது சோதனை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் தடை செய்யப்பட்ட ஹிஸ்பு - உத் - தஹீர் அமைப்பு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும், கணக்கில் காட்டப்படாத பணத்தை பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அமீர் உசேன் என்பவர் தான் முக்கியப் புள்ளியாக செயல்பட்டு, தடை செய்யப்பட்ட அமைப்பிற்கு பல்வேறு கூட்டங்கள் நடத்தியது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: குற்றாலத்தில் குளிக்க வருபவர்களே குறி.. பாலியல் வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் மோசடி.. பொள்ளாச்சி ஆசாமி சிக்கியது எப்படி?