திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் மானூர் அடுத்த உக்கிரன் கோட்டை பகுதியில் அமைந்துள்ள இந்தியன் வங்கி அருகே சுதந்திரப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரன் உருவப்படம் நீண்ட ஆண்டு காலமாக இருந்து வருகிறது.
இந்த படத்தை நேற்று இரவு மர்மநபர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளனர். இதனால் இமானுவேல் சேகரன் உருவப்படம் முழுவதுமாக எரிந்து தீக்கரையானது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் மீண்டும் அதே இடத்தில் இமானுவேல் சேகரன் படத்தை நிறுவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உக்கிரன் கோட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் தொடர் தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அங்குப் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதனையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தியுள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாகச் சந்தேகத்தின் பெயரில் ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: தமிழகம், புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு.. மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்படக்கூடாது என அமைச்சர் அறிவுரை!