சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே அவ்வப்போது மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த இன்று மற்றும் நாளை 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், தமிழ்நாட்டிற்கு இன்று முதல், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலத்திற்கு இன்று மற்றும் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டிற்கு இன்று முதல் ஆரஞ்சு நிற எச்சரிக்கையும், அடுத்த 2 நாட்களுக்கு கேரளா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கடலோர கர்நாடகாவில் ஆரஞ்சு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) June 25, 2024
ஜூன் 28ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான், லட்சத்தீவு மற்றும் தென் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்: மேலும், தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கோவை, நீலகிரி மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று காற்று, இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் அலர்ட்டும் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.