சென்னை: வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளதுள்ளதாகவும், தென்தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி (நீலகிரி) 2 செ.மீ மழையும், சீர்காழி (மயிலாடுதுறை) 1 செ.மீ மழையும் பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 41.0 ° செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக ஈரோட்டில் 18.6 ° செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வானிலை எச்சரிக்கை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை (வியாழக்கிழமை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதே போல் செப்.20 முதல் 24 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெயில்: தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (18.09.2024 மற்றும் 19.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதனால் ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று முதல் செப்.22 வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்: அதே போல் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகள்: மேலும் தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகள் மற்றும் மத்தியிற்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்தபட்சம் 35 கி.மீ வேகத்திலும் அதிகபட்சமாக 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நிபா வைரஸ் பாதிப்பு; தமிழக - கேரள எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்திய சுகாதாரத்துறை!