சென்னை: முதுகு தண்டுவடம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, யார் உதவியுமின்றி தானாக எழுந்து நிற்பதென்பது முடியாத காரியமாக இருந்து வந்த நிலையில், சென்னை ஐஐடி அதனை தற்போது சாத்தியப்படுத்தியுள்ளது. ஒரு பொத்தானை அழுத்தினால் போதும், வீல்சேரில் அமர்ந்திருப்பவர் யாருடைய உதவியுமின்றி, உட்காரும் நிலையில் இருந்து சிரமமின்றி எழுந்து நிற்கும் நிலைக்கு மாறும் வகையில், புதிய மின்சார வீல்சேரை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளது.
இதற்கு முன்னர் கையால் இயக்கக்கூடிய “அரைஸ்” என்ற இந்தியாவின் முதலாவது சக்கர நாற்காலி உருவாக்கப்பட்டது. ஆனால், அதனை இயக்கும் அளவிற்கு உடலின் மேல்பகுதியில் மூட்டு வலிமை இல்லாத பயனர்களுக்கு, இது சிரமமான காரியமாக இருந்துள்ளது. இதைத் தொடர்ந்து “நியோபோல்ட்” எனப்படும் இந்தியாவின் முதலாவது மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி திட்டம் கொண்டு வரப்பட்டது.
இந்த இரு திட்டங்களுக்கும் ஐஐடி மெட்ராஸ் மறுவாழ்வு ஆராய்ச்சி மற்றும் சாதன மேம்பாட்டுக்கான டிடிகே மையத்தின் தலைவரான, பேராசிரியை சுஜாதா ஸ்ரீனிவாசன் தலைமை வகித்தார். இவரது தலைமையிலேயே, தற்போது இந்த புதிய மின்சார சக்கர நாற்காலி திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி தொழில் ஊக்குவிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனமான “நியோமோஷன்” மூலம் “நியோஸ்டாண்ட்” எனும் இந்த புதிய மின்சார வீல்சேர், தற்போது வணிக ரீதியாக சந்தைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பயனரை மையமாகக் கொண்ட வடிவமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சாதனம், சக்கர நாற்காலி அனுபவத்தை மறுவரையறை செய்கிறது. இதன் மூலம் பயனர்கள் சிரமமின்றி நீண்ட நேரம் உட்காரவும், தேவைப்படும்போது எழுந்து நிற்கவும் போன்ற வசதியை ஏற்படுத்தித் தருகிறது. மேலும், இதை பயன்படுத்துவதால் உடல் ரீதியான பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
மிகக் குறுகலான இடைவெளியில், எளிதாக கையாளக்கூடிய இந்த வீல்சேர், பயனர்களின் வாழ்க்கைத்தரம் மற்றும் சமூகப் பங்கேற்பை மேம்படுத்தும் வகையில், புதுமையான அணுகுமுறையை ஏற்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அன்றாட நடவடிக்கைகளுக்கும், சிறந்த ரத்த ஓட்டத்துக்கும், செரிமானத்திற்கும் எழுந்து நிற்பதென்பது அவசியமாகிறது. மனிதன் எழுந்து நிற்பதன் மூலம் உடல் நலப் பிரச்னைகளை தவிர்க்க முடியும்.
சக்கர நாற்காலிகளைப் பயன்படுத்துவோர் நிற்க வேண்டியதன் அவசியம் மற்றும் அதில் உள்ள சிரமங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இப்பிரச்னைக்கு தீர்வுகாண சென்னை ஐஐடி குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போதுள்ள சூழலில், பயனர்கள் பெரும்பாலும் பிரறை சார்ந்து இருக்க வேண்டும் என்ற நிலையில், பயனர்களின் சுதந்திரம் மற்றும் அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கூட்டு சுற்றுச்சூழல் அமைப்பின் ஒத்துழைப்புடன் செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ள இந்த நியோஸ்டாண்ட் திட்டத்தின் பின்னணியில் உள்ள தொலைநோக்குப் பார்வையை விளக்கும் சென்னை ஐஐடி இயந்திரப் பொறியியல் துறை ஆசிரியரான பேராசிரியை சுஜாதா ஸ்ரீனிவாசன், “சக்கர நாற்காலியில் நிற்கும் செயல்பாட்டை ஒருங்கிணைப்பதால் உடல் ஆரோக்கியம், இயங்குநிலை, உளவியல் ரீதியாக நன்மைகள் கிடைக்கின்றன. எங்களின் முதல் கண்டுபிடிப்பான அரைஸ் என்ற நிற்கும் நாற்காலி, குறைந்த விலையில், குறிப்பாக கிராமப்புற பயனர்களுக்கு நிற்கவும், குறுகிய தூரத்திற்கு வெளிப்புற இயக்கத்திற்கு ஏற்ற வகையிலும் வடிவமைக்கப்பட்டது.
நிற்கும் இயந்திர நுட்பத்தை இயக்கும் அளவுக்கு, உடலின் மேல்பகுதியில் மூட்டு வலிமை இல்லாத பயனர்களுக்கு இது போன்ற சாதனம் தேவைப்பட்டது. நியோஸ்டாண்ட் சாதனத்தில் உட்கார்ந்திருப்போர், எழுந்து நிற்க பயனர் ஒரேயோரு சுவிட்சைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். பயனர் படிப்படியாக எழுந்து நின்று, பயிற்சிகளை செய்ய மருத்துவமனையின் பராமரிப்பாளரோ அல்லது சிகிச்சை அளிப்பவரோ உதவ முடியும். இது சிகிச்சையின் முக்கிய பகுதியாகும்.
முதுகு தண்டுவடம் மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், வீல்சேரில் இருந்து எழுந்து நிற்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. மேலும், இது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 90 ஆயிரம் ரூபாய் ஆகும். சமூக பங்களிப்பு நிதி மற்றும் அரசின் மாற்றுத்திறனாளி நலத்துறை உதவியால் தேவையுள்ளவர்கள் பெற்று பயன்படுத்தலாம்” என தெரிவித்தார்.
கடந்த 14 ஆண்டுகளாக முள்ளந்தண்டுவட நோயால் (quadriplegia) பாதிக்கப்பட்ட ஜஸ்டின் ஜேசுதாஸ் கூறும்போது, “தனிப்பட்ட நடமாட்டத்திற்கும், தினசரி செயல்பாடுகளுக்கும் பாதுகாப்புடன் கூடிய வசதியை சக்கர நாற்காலிகள் நமக்கு வழங்குகின்றன. எழுந்து நிற்க ஒரேயொரு பொத்தானை அழுத்தினால் போதும் என்பதால், அதனை உள்ளடக்கிய வகையில் இந்த சக்கர நாற்காலி அமைந்துள்ளது. இதனால் முள்ளந்தண்டுவட நோயாளிகள் யாருடைய உதவியுமின்றி எழுந்து நிற்க முடியும்” எனத் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த ரம்யா கூறும் பொழுது, “நான் எட்டாம் வகுப்பு படிக்கும் பொழுது ஏற்பட்ட விபத்தினால், முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் என்னால் எழுந்து நிற்க முடியவில்லை என்ற கவலை தொடர்ந்து இருந்து வந்தது. ஆனால், தற்பொழுது இந்த நாற்காலியில் இருந்து நானே எழுந்து நிற்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அது மட்டுமின்றி, எனக்கு தேவையான பொருட்களை நானே எடுத்துக் கொள்ள முடிகிறது. மற்றவர்களுடன் நேருக்கு நேர் பார்த்து, எழுந்து நின்று பேச முடிகிறது. இந்த சக்கர நாற்காலியை பயன்படுத்தும்போது, எந்தவித வலியும் உடலில் ஏற்படவில்லை.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதன் மூலம் என்னால் எனது தாய்க்கு உணவு சமைத்துக் கொடுக்கவும், சகோதரர்களுடன் இயல்பாக பழகவும் முடியும். சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர்கள் தேசிய கீதம் பாடும்போது அதில் அமர்ந்துதான் இருப்போம், ஆனால் இனிமேல் நாங்களும் எழுந்து நின்று தேசிய கீதத்திற்கு மதிப்பு அளிப்போம்” என உணர்ச்சி பொங்க தெரிவித்தார். சென்னை ஐஐடியின் இந்த புதிய கண்டுபிடிப்பு இன்று (மார்ச் 20) பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு, அறிமுகம் செய்யப்பட்டது.