சென்னை: சென்னை ஐஐடி அறிவியலை பிரபலப்படுத்தும் முன்முயற்சியின் மூலம், 2026ஆம் ஆண்டுக்குள் ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 50,000 அரசுப் பள்ளி மாணவர்களைச் சென்றடையவும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பிராந்திய மொழிகளில் தொழில் வழிகாட்டுதலை வழங்கவும் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாணவர்களை 'ஸ்டெம்' (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகள் தொடர்பான தொழில்களில் ஈடுபட ஊக்குவிக்கும் நோக்கத்துடன் இந்த முயற்சி இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 9,193 கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு 3,20,702 புத்தகங்களை இந்த கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள பள்ளிகள் மற்றும் மாணவர்கள் https://biotech.iitm.ac.in/Faculty/CNS_LAB/outreach.html என்ற இணைப்பின் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
இதுபோன்ற முன்முயற்சிகளின் அவசியம் குறித்து, சென்னை ஐஐடி மெட்ராஸ் பூபத் மற்றும் ஜோதி மேத்தா உயிரி அறிவியல் பள்ளியின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் ஸ்ரீனிவாஸ் சக்ரவர்த்தி கூறும்போது, "சிக்கலான அறிவியல் கருத்துகள் அனைவரையும் சென்றடைய அனைத்து தரப்பினரும் அணுகக் கூடிய ஒரு பாலமாக 'பாப்புலர் சயின்ஸ்' அமைந்துள்ளது.
9,193 கிராமப்புற மற்றும் அரசுப் பள்ளிகளைச் சென்றடைந்து, 3,20,702 புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கியிருக்கிறோம். தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்போது வரை வழங்கியிருக்கிறோம். இந்தியாவில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இப்பணிகளை மேற்கொள்வது அவசியமாகிறது. எங்களின் தற்போதைய செயல்பாடுகள் ஒரு தொடக்கம்தான்” எனத் தெரிவித்தார்.
இந்த முன்முயற்சியின் மூலம் மேற்கொள்ளப்படும் முக்கிய பணிகள்:
- பிரபலமான அறிவியல் புத்தகங்கள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அரசுப் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
- பிராந்திய மொழிகளில் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல்களை வழங்குதல்.
- அறிவியல் சோதனைகள், ஊக்கமளிக்கும் வகுப்புகள் மூலம் ஸ்டெம் (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) துறைகளில் மாணவர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்துதல்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் போத் பிரிட்ஜ் (Both Bridge) நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த அளவீட்டுக் கருவியின் மூலம், பள்ளி மாணவர்கள் மை சாய்ஸ் மை ஃபியூச்சர் (MCMF) என்ற இலவச தொழில் வழிகாட்டுதல் மதிப்பீட்டைப் பெறுகின்றனர்.
எளிய தொழில் வழிகாட்டுதல் மதிப்பீட்டுக் கருவியான எம்சிஎம்எஃப், மாணவர்களுக்கு விரிவான நுண்ணறிவுகளை வழங்குகிறது. ஆன்லைன் மூலமாக பெறப்படும் இந்த தொழில் வழிகாட்டுதல் தீர்வு, பள்ளி மாணவர்கள் தங்கள் பலத்தின் அடிப்படையில் சரியான வாழ்க்கை பாதைகளை அடையாளம் காண உதவுகிறது.
இக்கருவி ஆங்கிலத்துடன் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி ஆகிய ஏழு இந்திய மொழிகளிலும் தற்போது கிடைக்கிறது. மாணவர்கள் விரும்பும் துறைகளை பற்றியும், அதில் ஸ்டெம் துறைகளை குறிப்பாக வலியுறுத்தும் விதமாகவும் தொழில் வழிகாட்டுதல் அமர்வுகள் நடத்தப்படுகினறன.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 10,931 மாணவர்களுக்கு இக்கல்வி நிறுவனம் வழிகாட்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க: மின்சாதனங்களை இடம் மாற்றம் செய்வதற்கான கட்டணம் 5% ஆக குறைப்பு - TANGEDCO அறிவிப்பு!