சென்னை : சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் கத்தியால் குத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவர் பாலாஜியை நேரில் சந்தித்து தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினர் கண்ணதாசன் விசாரணை நடத்தினார். மேலும், மருத்துவமனை இயக்குனர் பார்த்த சாரதியை சந்தித்தும் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கண்ணதாசன் , "மருத்துவர் பாலாஜியைச் சந்தித்து நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டோம். அவருக்கு காது பகுதிகள், கழுத்து, தலை போன்றவற்றில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன. மிக சிரமப்பட்டு மருத்துவர்கள் அவரை காப்பாற்றி இருக்கின்றனர் என்ற தகவலை தெரிவித்தனர்.
அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது அந்த குற்றம் சுமத்தப்பட்ட நபரை உடனடியாக பிடித்து கைது செய்தோம் என்று தெரிவித்தனர். அதுமட்டுமின்றி மருத்துவர்களுக்கு மேற்கொள்ளக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகள், நோயாளிகளுக்கு எந்தவிதமான இடர்பாடுகள் இல்லாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேட்டறிந்தேன். துணை முதலமைச்சரும், மருத்துவத் துறை அமைச்சரும் உடனடியாக அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதையும் மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
விக்னேஷ் இறப்பு குறித்தும் விசாரணை: அதுமட்டுமின்றி விக்னேஷ் என்ற ஒரு நோயாளி இறந்தது சம்பந்தமாக விசாரித்தபோது அவர் ஏற்கனவே ஒரு மருத்துவமனையில் அவரது உடல் பல்வேறு உறுப்புகள் செயல் இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அது குறித்து அவர்களது உறவினர்களுக்கு தெரிவித்து கையொப்பம் பெற்ற பின்னர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விக்னேஷ் என்பவர் அவருடைய கல்லீரல், கிட்னி போன்றவை எல்லாம் செயல் இழந்த நிலையில் வேறு ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதிக பணம் செலவழிக்க முடியாத காரணத்தினால் இங்கே வந்தார்கள் என்றும், அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் உடல் தன்மையை பற்றி உறவினர்களுக்கு தெரிவித்து அவருக்கு சிகிச்சை அளித்தோம். அந்த சிகிச்சை முழுமையாக ஏற்றுக் கொள்ளாததால் உயிரிழந்ததாக தெரிவித்தனர். அது சம்பந்தமான விவரங்களை முழுமையாக பெற்ற பிறகு உங்களுக்கு விரிவான தகவல்களை தெரிவிக்கிறேன்.
இதையும் படிங்க : கிண்டி கலைஞர் மருத்துவமனையில் தம்பி மரணம்; முறையான சிகிச்சை இல்லை என அண்ணன் குற்றச்சாட்டு!
உறவினர்களிடம் மிரட்டி கையெழுத்து வாங்கிதாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு, அது பற்றி முழுமையான விசாரணைக்கு பிறகு தெரியவரும். தமிழ்நாட்டில் மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு மருத்துவமனை, மருத்துவர்கள், மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் எல்லாம் மிக அதிகப்படுத்தப்பட்ட சூழலை நாம் பார்த்தோம். ஆனால், மக்கள் தொகைக்கு ஏற்ப, நோயாளிகளுக்கு ஏற்ப மருத்துவர்கள் குறைவாக இருப்பதாக செய்திகள் வருகிறது. இது குறித்து மருத்துவத் துறை அமைச்சர் தெளிவுகளை கூறியிருக்கிறார். இது சம்பந்தமாக ஆணை வெளியிடப்படும்.
விக்னேஷ் தாக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு, அடிப்பது என்பதே தவறு. அது யார் செய்திருந்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் சில சமயங்களில் உணர்ச்சி அளிக்கக்கூடிய சம்பவங்களில் வேண்டுமென்றே தாக்கப்பட்டதா என்பதெல்லாம் விசாரணை பின்பு தான் தெரிய வரும். அதுபற்றிய புகார் வந்தாலும் எடுக்கப்படும். இதுவரை புகார்கள் எதுவும் வரவில்லை. நான் தான் செய்திகளை பார்த்து வந்துள்ளேன்" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்