சென்னை: தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பிஎஸ்சி (B.Sc) மற்றும் பிஓடி (BOT), பிபிடி (BPT), இளங்கலை மருந்தியல் (Bachelor of Pharmacy), பார்ம் டி (Pharm.D) ஆகிய பட்டப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு இன்று முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டிய அனைத்து விவரங்களுக்கும் www.tnmedicalselection.org என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் மாணவர்கள் நேரில் சென்று விண்ணபிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2024 - 2025ஆம் கல்வியாண்டில், 19 அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த 19 பட்டப்படிப்புகளில் 2 ஆயிரத்து 536 இடங்கள் இருக்கின்றன. மேலும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 4 விதமான பட்டப்படிப்புகளில், 22 ஆயிரத்து 200 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 14 ஆயிரத்து 157 இடங்கள் மாநில ஒதுக்கீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
விதிமிறைகள்: மருத்துவம் சார்ந்த பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு, தமிழ்நாடு அரசு அல்லது அதற்கு சமமான குழுமத்தால் நடத்தப்படும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் அல்லது இயற்பியல், வேதியியல், உயிரியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை எடுத்து படித்திருக்க வேண்டும்.
சேர்க்கை இடங்கள்: பிஎஸ்சி நர்சிங் பட்டப்படிப்பில் சென்னை, மதுரை, செங்கல்பட்டு, சேலம், தேனி, கடலூர் ஆகிய 6 மருத்துவக் கல்லூரிகளில் 350 இடங்கள் உள்ளன. இளங்கலை மருந்தியல் (Bachelor of Pharmacy) 4 ஆண்டு கால பட்டப்படிப்பில் சென்னை மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 120 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
ஒற்றைச்சாளர முறை கலந்தாய்வு: இதேபோன்று, தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் பட்டப் படிப்பில், 226 கல்லூரியில் 9 ஆயிரத்து 310 இடங்களும், இளங்கலை மருந்தியலில் 92 கல்லூரிகளில் 5 ஆயிரத்து 680 இடங்களும், பிபிடி 51 கல்லூரிகளில் 2 ஆயிரத்து 59 இடங்களும், பிஓடி 9 கல்லூரியில் 397 இடங்கள் என 20 ஆயிரம் இடங்கள் ஒற்றை சாளர முறை (Single Window Clearance System) கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளது.
இணையதளம்: பிஎஸ்சி, பிபார்ம், பிபிடி, பிஒடி உள்ளிட்ட 19 பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு இன்று முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கான சேர்க்கை நடத்துவது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக் கட்டணம்: அரசு மருத்துவக் கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு ஆண்டுக் கல்விக் கட்டணமாக 3 ஆயிரம் செலுத்த வேண்டும். தனியார் சுயநிதிக் கல்லூரியில் சேரும் மாணவர்கள் பிபார்ம் படிப்பிற்கு 43 ஆயிரமும், பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கு 45 ஆயிரம், பிபிடி, பிஓடி படிப்பிற்கு 33 ஆயிரம் ஆண்டிற்கு கல்விக் கட்டணமாக செலுத்த வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 தனிப்படை அமைத்தும் முடியல.. ஜெயக்குமார் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.. டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு! - Jayakumar Case Cbcid