சென்னை: சென்னை ஐஐடி ப்வர்த்தக் டெக்னாலஜிஸ் பவுண்டேஷன் நிறுவனம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் வல்லுநர்கள் ஆகியோரிடையே ஆக்கப்பூர்வமான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் கணிதத்தின் மூலம் அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் (Out Of The Box Thinking) படிப்பில் சேர்வதற்கு இன்று முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது.
பாடநெறி அனைவருக்கும் இலவசமாக ஆன்லைனில் கிடைக்கப்பெறும். அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் 4 நிலைகளைக் கொண்ட 10 வாரகால பாடத்திட்டமாகும். குறிப்பிட்ட கால அளவில் அசைன்மெண்ட் மற்றும் தீர்வுகள் போன்றவையும் இடம்பெறும். 10 லட்சம் பள்ளி-கல்லூரி மாணவர்கள் தவிர பணிபுரியும் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரையும் சென்றடைய சென்னை ஐஐடி ப்ரவர்த்தக் திட்டமிட்டுள்ளது.
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 9ம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங் வகுப்பு ஆகஸ்ட் 10ம் தேதி தொடங்கும். விருப்பமுள்ள மாணவர்கள், https://iitmpravartak.org.in/out-of-box-thinking என்ற முகவரியில் பதிவு செய்யலாம். பாடத்திட்டம் மற்றும் பல்வேறு நிலைகளுக்கான தகுதி பற்றிய கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐஐடி இயக்குநர் .காமகோடி கூறும்போது, உலகின் அன்றாடப் பிரச்சனைகளை புதுமையான முறையில் அணுகி தீர்வு காண்பதில் ‘அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்’ சிந்தனை மிகவும் அவசியமானதாகும். கணிதத்தில் அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் சிந்தனையைப் பயன்படுத்துவதால் படைப்பாற்றல் வளரச் செய்கிறது. அத்துடன் நிலையான சூத்திரங்கள், வழிமுறைகள் ஆகியவற்றுக்கு அப்பால் சிந்திக்க ஊக்குவித்து, புதிய அணுகுமுறைகள், தனித்துவமான தீர்வுகளுக்கு வழிவகுக்கிறது.
ஒவ்வொரு தனி நபரும் அனுமானங்கள் குறித்து கேள்வி எழுப்பவும், மாற்று வழிகளை ஆராயவும், வெவ்வேறு கண்ணோட்டங்களில் தீர்வுகளை மதிப்பிடவும் அவுட் ஆப் தி பாக்ஸ் திறமையை வளர்க்கச் செய்கிறது. எண்ணற்ற தொழில்நுட்ப, அறிவியல் முன்னேற்றங்கள் புதுமையான கணித சிந்தனையால் விளைந்தவைதான். அவுட் ஆப் தி பாக்ஸ் சிந்தனையை ஊக்குவிப்பது பொறியியல் முதல் மருத்துவ அறிவியல் வரையிலான துறைகளில் முன்னேற்றங்கள், கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுக்கும். நம் நாட்டின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் இளம் மனங்களை வித்தியாசமாக சிந்திக்க அதிகாரம் அளித்தல் மிகவும் அவசியம் எனத் தெரிவித்தார்.
கற்கும் ஆர்வமுடைய மாணவர்கள், இந்தியா முழுவதும் குறிப்பிட்ட நகரங்களில் உள்ள மையங்களில் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படும் தேர்வுக்கும் விண்ணப்பப் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வில் அவர்களின் செயல்திறனைப் பொருத்து சென்னை ஐஐடி ப்வர்த்தக் வழங்கும் கிரேடு சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்கள் நேரில் பங்கேற்கும் வகையில் பாடநெறிக்கான திட்டமிடப்பட்ட தேர்வு டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்படும்.
சென்னை ஐஐடி ப்வர்த்தக் பவுண்டேஷனுக்கும் தங்கள் பள்ளிகளுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் பாலமாக செயல்படக்கூடிய ஆசிரியர்களை பள்ளிகளே நியமித்துக் கொள்ளலாம். பள்ளியில் இந்தப் படிப்பு செயல்படுத்துவதை ஊக்குவித்தல், ஏற்பாடுகளைச் செய்தல்,மேற்பார்வையிடுதல், மாணவர்கள் பங்கேற்பை ஊக்குவித்தல், கற்றல் செயல்முறை முழுமைக்கும் தேவையான ஆதரவை வழங்குதல் போன்றவை அவுட் ஆப் தி பாக்ஸ் திங்கிங் பள்ளி ஒருங்கிணைப்பாளரின் முதன்மைப் பணியாகும்.
பள்ளியின் எந்தவொரு ஆசிரியரும் கல்வி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரின் அனுமதியுடன் இப்படிப்பிற்காக விண்ணப்பப்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.