விழுப்புரம்: சமுதாய வளர்ச்சிக்காக சேவையாற்றும் நபர்கள், 'தமிழ்நாடு முதலமைச்சர் மாநில இளைஞர் விருது' (TAMILNADU CM STATE YOUTH AWARD) பெற விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் சமுதாய வளர்ச்சிக்காக சேவையாற்றும் இளைஞர்களது சிறந்த பணியை அங்கீகரிக்கும் வகையில், 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று (Independence Day) முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், ஒவ்வொரு ஆண்டும் 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்த விருதானது, ரூ.1 லட்சம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும். அந்தவகையில், 2024ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.
மே 15ஆம் தேதி கடைசி நாள்: எனவே, இவ்விருதினை பெற 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில், மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மே 1ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் நிலையில், மே 15ஆம் தேதியே கடைசி நாளாகும். அன்று மாலை 4 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டிய தகுதிகள்:
- 15 முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். 1.4.2023 அன்று 15 வயது நிரம்பியவராகவும் மற்றும் 31.3.2024 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
- கடந்த நிதியாண்டில் (2023 - 2024), அதாவது 1.4.2023 முதல் 31.3.2024 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
- விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்)
- விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றி இருக்க வேண்டும்.
- மத்திய மற்றும் மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுவோர், இவ்விருதிற்கு விண்ணப்பிக்க முடியாது.
- விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு, விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
- இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள், மே 15ஆம் தேதி அன்று மாலை 4 மணி ஆகும்.
மேலும், இந்த விருது தொடர்பான பிற விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்" என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மக்களவை தேர்தலை புறக்கணித்த ராஜஸ்தான் கிராமம்! என்ன காரணம்? - Lok Sabha Election 2024