சென்னை: தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும், சுயநிதி என 492 பாலிடெக்னிக் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரிகளில் பட்டயப்படிப்புகளான மெக்கானிக்கல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், மீன்வள தொழில்நுட்பம், மெரைன் இன்ஜினியரிங் உள்ளிட்ட பட்டயப்படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுக் கல்லூரியில் உள்ள இடங்களுக்கான மாணவர்கள் சேர்க்கை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.
2024-25ஆம் ஆண்டு சேர்க்கை: அதனைத் தொடர்ந்து, இந்தாண்டு தமிழ்நாட்டில் உள்ள 54 பாலிடெக்னிக் கல்லூரிகளில் 19,000 இடங்களில் முதலாம் ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதை தொடர்ந்து, பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள பட்டயப்படிப்புகளில் 2024-2025ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் நேரடியாக 2ஆம் ஆண்டில் சேருவதற்கு விண்ணப்பிக்கலாம் என தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? மாணவர்கள் மே 6ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரையில் https://www.tnpoly.in என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கு முடியாத மாணவர்கள் மாவட்ட சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தகுதி: பாலிடெக்னிக் பட்டயப்படிப்பில் 2ஆம் ஆண்டில் நேரடியாக சேருவதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இயற்பியல், கணக்கு, வேதியியல், கம்ப்யூட்டர் அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, உயிரியல், உயிரி தொழில்நுட்பம், தொழிற்கல்வி பாடப்பிரிவுகள், விவசாயம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில் ஏதேனும் 3 எடுத்து படித்திருக்க வேண்டும். அல்லது 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர் 2 ஆண்டுகள் ஐடிஐ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பதிவுக் கட்டணமாக ரூ.150 செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. மேலும் விவரங்களுக்கு https://www.tnpoly.in என்ற இணையதளத்தில் உள்ள தகவல்களை பார்த்து அறிந்துக் கொள்ளலாம் என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஷவரில் குளித்த குட்டி விநாயகர்.. மழை வேண்டி சிறப்பு பூஜை! - Vinayagar Shower