- " class="align-text-top noRightClick twitterSection" data="">
சென்னை: நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதியை நேற்றைய முன்தினம் (மார்ச் 16) இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. அந்த வகையில், தமிழ்நாட்டிற்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் மாலை 3 மணி முதல், தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படைகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிரமாக சோதனைகள் மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் அடிப்படையில், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 3 பறக்கும் படை என்ற கணக்கில், தமிழ்நாடு முழுவதுமாக 702 பறக்கும் படைகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தஞ்சாவூர், தூத்துக்குடி, கரூர், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ரொக்கம், தங்க நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவற்றை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.4.5 லட்சம் ரொக்கமும் மற்றும் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களும் பிடிபட்டன.
தூத்துக்குடி: தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, உரிய ஆவணங்கள் முறையாக இல்லாத 86 ஆயிரத்து 750 ரூபாயைத் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து, தூத்துக்குடி வட்டாட்சியர் பிரபாகரிடம் ஒப்படைத்தனர்.
கரூர்: கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் ஒரே நாளில் மொத்தம் 29லட்சத்து 39 ஆயிரத்து 158 ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பற்றிய தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், அரசுக் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 6 லட்சத்து 11 ஆயிரத்து 600 ரூபாய் பணத்தை, தேர்தல் நிலையான தணிக்கை குழுவினர் பறிமுதல் செய்தனர். இதேபோல, திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் - ஆசனாம்பட்டு சாலையில், 1 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர், அப்பணத்தை வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மொத்தமாக நான்கு இடங்களில் ரூ.11.42 லட்சம் ரொக்கமும், 2 பவுன் நகையும் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்களைக் காண்பித்து பணத்தையும், நகைகளையும் மீட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்: திருப்பூர் காங்கயம் ரோடு பகுதியில் கேரளாவைச் சேர்ந்த நில வியாபாரியிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.48 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இதுவரை திருப்பூரில் 53 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இன்று காலை வரையில் 5 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நாளை வேட்பு மனுத்தாக்கல்.. வேட்பாளர்களுக்கான விதிகளை அறிவித்த தேர்தல் அலுவலர்!