கோயம்புத்தூர்: கேரள மாநிலம், வயநாடு மேப்பாடி பகுதியில் உள்ள சூரல் மலை முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து வரும் மீட்புப் பணிகளில் ராணுவம் மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்புத் துறையினர் என ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டுள்ளனர்.
மூன்றாவது நாளான இன்றும் (ஆக.1) மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், மேப்பாடி பகுதியிலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சூரல் மலையிலிருந்து முண்டக்கைக்கு சாலி ஆற்றின் நடுவே தற்காலிக பாலம் அமைக்கும் பணியை இந்திய ராணுவத்தின் பொறியியல் பிரிவான மெட்ராஸ் இன்ஜினியர் குரூப்பைச் சேர்ந்த (MEG) 200க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் பெய்லி பாலத்தை கட்டி வருகின்றனர்.
பொதுவாக பேரிடர் காலங்களில் வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டாலோ அல்லது நிலச்சரிவின் போது சாலைகள் துண்டிக்கப்பட்டாலோ, அங்குள்ளவர்களை மீட்க ராணுவத்தினர் தற்காலிக பாலம் (பெய்லி) அமைத்து அதன் வழியாகச் சென்று மீட்புப் பணியில் ஈடுபடுவார்கள்.
அதன்படி, தற்போது வயநாடு பகுதியில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால், முண்டக்கை மலைக் குடியிருப்பு பகுதியிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள இருவழிஞ்சியின் பிறப்பிடமான வனப்பகுதியில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், மேப்பாடி மற்றும் சூரல்மலை நகரை இணைக்கும் சாலியாற்றின் கிளை நதியான இருவாழஞ்சு ஆற்றின் குறுக்கே உள்ள பாலம் தொடர் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டதாலும், நிலச்சரிவினால் ஆற்றின் இருபுறமும் உள்ள வீடுகள் மற்றும் சூரல்மாலா நகரமும் பாலமும் சேதமடைந்தன.
இதனை அடுத்து, பிரிகேடியர் அர்ஜுன் செகன் தலைமையிலான குழுவினர், 90 டன் எடை வரை தாங்கக்கூடிய 190 அடி நீள தற்காலிக பாலத்தை (பெய்லி) புதன்கிழமை முதல் இரவு பகலாக கட்டி வருகின்றனர். இதற்காக கோழிக்கோட்டிலிருந்து பாலத்தின் சில பகுதிகள் விமானம் மூலம் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டது.
முண்டக்கையில் உள்ள மக்களை மீட்க இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. ஆம்புலன்ஸ் மற்றும் பிற வாகனங்கள் ஆற்றின் மறுபுறம் சென்று வரவும் இந்த பாலம் உதவியாக இருக்கும். முண்டக்கை பகுதியில் ஏராளமானோர் மண்ணில் புதைந்து உள்ளவர்களின் உடலை மீட்கவும், உயிருடன் உள்ளவர்களை ஆம்புலன்ஸ் மூலம் விரைவாக அழைத்து வரவும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது ஆற்றை ஜிப் கயிறு மூலம் கடந்து சென்றே மீட்புப் பணியில் ஈடுபடுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த பாலத்தை விரைவாக அமைத்து மீட்புப் பணியை துரிதப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பாலம் அமைக்கும் பணி இன்று மாலை நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த பெய்லி பாலம் கடந்த 1940 - 1941ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டு, இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்டது. இதன் பாகங்களை எளிதில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு சென்று தற்காலிக பாலம் அமைக்க முடியும். இந்தப் பாலம் ராணுவப் பணிகளுக்கும், இயற்கை பேரிடர் ஏற்படும் இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
பாலத்தை வலுப்படுத்த இணைப்புகள் மற்றும் இரும்பு தூண்களைக் கொண்டு எந்தவொரு பக்கவாட்டு அழுத்தத்தையும் தாங்கி, பாலத்தின் எடையைத் தாங்கும் அளவுக்கு அடித்தளம் உறுதியானதாக அமைக்கப்படுகிறது. கட்டமைப்பை உருவாக்கும் முன்பு இரும்பு தூண்கள் கட்டுமானத் தளத்திற்கு வழங்கப்பட்டு தரையில் ஒன்றாக இணைக்கப்படுகின்றன. பின்னர், கிரேன்கள் அல்லது ராணுவ வீரர்கள் மூலம் உயர்த்தப்பட்ட பிறகு, பேனல்கள் இணைப்புகள் மற்றும் தூண்களுடன் இணைக்கப்பட்டு பாலம் அமைக்கப்படுகிறது.
இதுமட்டுமல்லாது, இந்த பாலங்கள் 24 மணி நேரம் அல்லது ஒரு சில நாட்களில் இடத்திற்கு தகுந்தார் போல் கட்டி முடிக்கப்படும். பெய்லி பாலம் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் பொறியாளர் சர் டொனால்ட் பெய்லியால் உருவாக்கப்பட்டது. ஏற்கனவே, இந்த பெய்லி பாலம் உத்தராகாண்ட், இமாச்சல் பகுதிகளில் ஏற்பட்ட பேரிடர் காலங்களில் இந்திய ராணுவத்தினரால் கட்டப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்றதாக ராணுவத்தினர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 3 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சத்தை தொட்ட ஒகேனக்கல் நீர்வரத்து.. 1.90 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!