கிருஷ்ணகிரி: ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன எலசகிரியில் உள்ள அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அப்பகுதியில் உள்ள ஏரியில் ஆழ்த்துளைக்கிணறு அமைத்து வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வழக்கமாக தண்ணீர் வழங்கப்பட்டதை அடுத்து அதனை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி உள்ளனர். இந்நிலையில், அன்று இரவு முதல் அப்பகுதியில் உள்ள ஒரு சிலருக்கு திடீரென வாந்தி, மயக்கம், வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, மேலும் சிலருக்கு இதே போல் உடல் உபாதைகள் ஏற்பட்டதால், நேற்று காலை ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு சிக்சைக்காக அழைத்துவரப்பட்டனர். இதில் மஞ்சுளா (34), எல்லம்மா (66), முனிதாயம்மா (77), ராமகிருஷ்ணன், கோபால் (35), அஸ்வினி (14) உள்ளிட்ட எட்டு பேர் ஓசூர் அரசு மருத்துவமனையிலும், ஐந்து பேர் தனியார் மருத்துவமனையிலும் என 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உதவி ஆட்சியர் பிரியங்கா, மேயர் சத்யா, ஆணையாளர் சினேகா ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியும், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். மாநகர நல அலுவலர் பிரபாகரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
மேலும், உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு தண்ணீரில் கழிவுநீர் கலந்துள்ளதா? அல்லது தொழிற்சாலை கழிவுநீரா? வேறு காரணமா என சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். அதேபோல், டிஎஸ்பி பாபுபிரசாந்த் மற்றும் சிப்காட் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து மேயர் சத்யா கூறும் போது, “அம்பேத்கர் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள மக்களுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. தண்ணீர் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பின் தான் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அம்பேத்கர் நகரில் 25 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்” என்றார்.