தர்மபுரி: கர்நாடக - கேரள மாநிலங்களில் பெய்யும் தொடர் கனமழையின் காரணமாக காவிரி படுகையில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது முழு கொள்ளளவை அடைந்தது. கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பியதை அடுத்து அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கர்நாடகா உபரி நீரை காவிரி ஆற்றில் வெளியேற்றி வருகிறது.
கர்நாடக மாநில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. நேற்று ஒரு லட்சத்து 55 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் கபினி மற்றும் கே ஆர் எஸ் அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது.
அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரித்தான் காரணமாக தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட ஒன்பது மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு மத்திய நீர் ஆணைய அதிகாரி வெள்ள அபாய எச்சரிக்கை கடிதம் அனுப்பி இருந்தார்.
கர்நாடக அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது. தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் தண்ணீர் வேகமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வந்தடைந்தது. ஒகேனக்கல் பகுதியில் உள்ள அருவிகள் தண்ணீரில் மூழ்கியும் ஐவர் பவனி உள்ளிட்ட பகுதிகள் தண்ணீரில் மூழ்கி ஒகேனக்கல் காவிரி ஆறு பறந்து விரிந்து வெள்ள காடாக காட்சி அளிக்கிறது.
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒகேனக்கல்லுக்கு செல்ல மற்றும் குளிக்க பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் 13வது நாளாக தடை விதித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறை, காவல்துறை, ஊர்க் காவல் படை, தீயணைப்பு துறை பணியாளர்கள் ஆற்றங்கரை ஓரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் தண்ணீர் வரும் சூழ்நிலை இருக்கக்கூடிய இடங்களுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: போட் புரமோஷனுக்கு லேட்டா வந்த யோகி பாபு- சொன்ன காரணத்தால் வந்தது சிக்கல்? - Yogi Babu