சென்னை: தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் இன்று (பிப்.09) நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு, உருது மற்றும் தமிழ் மாெழி அறிஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
மேலும், கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய ராஜகண்ணப்பன், “அதிமுகவினரை திமுக அரவணைத்ததால்தான் தற்போது திமுக அமைச்சரவையில் அதிமுகவிலிருந்து வந்தவர்கள் 9 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
திராவிட கட்சிகளில் இருந்து வந்தவர்களை மாற்றுக் கட்சியினராக பார்க்கும் எண்ணம் திமுகவிற்கு கிடையாது. கருணாநிதியின் வசனத்தால்தான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திரைத்துறையில் புகழ் பெற்றனர். கல்வி வளாகங்களில் மாணவர்கள் - பேராசிரியர்கள் இடையே சாதி, மத பாகுபாடு இருக்கக் கூடாது. கல்வி நிலையங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். அதிகார தலையீடோ, அரசியல் தலையீடோ கல்வி நிறுவனங்களில் இருக்கக் கூடாது” என பேசினார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்து ராஜகண்ணப்பன் பேசுகையில், “சென்னை பல்கலைக்கழகத்தின் வங்கிக் கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியது குறித்து முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில், அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பின்னர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கணக்கு வழக்குகள் வருமான வரித்துறைக்கு சென்றடையவில்லை என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது என்ற கேள்விக்கு, விசாரணை அறிக்கை வெளியிடும்போது எது உண்மை என தெரியும் என்றார்.
ஆளுநரைச் சந்திக்க திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, “ஆளுநர் அவரது வேலையை பார்க்கிறார். நாங்கள் எங்களுடைய வேலையை பார்க்கிறோம். காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆட்களையே நியமிக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் நியமனம் செய்வோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “திமுக அரசு, சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான அரசாக உள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்ற அறிவுறுத்தல் நிர்வாக ரீதியிலானது. அது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க முடியாது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் சஸ்பெண்ட் - உயர் கல்வித்துறை நடவடிக்கை!