சென்னை: சேலம் மாவட்டம், நெடுங்குளத்தைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவுச் சங்கம் என்ற சங்கம் துவங்கப்பட்டது. மேட்டூர் இடதுகரை பாசனக் கால்வாய் ஆயக்கட்டுதாரர்களான முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர்.
எடப்பாடி பழனிசாமி, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, சேலம் வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சங்கத்தில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர், 5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையில், 27 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டது எனவும், எடப்பாடி பழனிசாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எவ்வளவு தண்ணீர் காவிரியில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை அளவிட எந்த மீட்டரும் இல்லாமல், தொடர்ச்சியாகத் தண்ணீர் எடுக்கப்பட்டுப்பட்டதாகவும், இதுசம்பந்தமாக 2023ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தினர் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதை மீட்டர் பொருத்தி, கண்காணித்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாரிஸ் ஒலிம்பிக் பாய்மரப் படகு போட்டியில் இருக்கும் சவால்கள் என்னென்ன? - நேத்ரா குமணன் பிரத்யேக பேட்டி! - NETHRA KUMANAN Olympic Practice