“கிறிஸ்தவர்களுக்கு சட்டப்பூர்வ வாரியம் ஏற்படுத்த வேண்டும்” - ஐகோர்ட் அமர்வு! - BOARD FOR CHRISTIAN PROPERTIES
கிறிஸ்தவ நிறுவனங்களின் நிர்வாக விவகாரங்களை ஒழுங்கமைக்க ஒரு சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது.
Published : Oct 25, 2024, 10:56 AM IST
மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் தாளாளர் நியமன விவகாரம், நீதிமன்ற உத்தரவை முறையாக நடைமுறைப்படுத்தாத விவகாரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில், ஒருவரை கல்லூரியின் தாளாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்ட நிலையில், பேராசிரியர்கள் சிலர் அவர் மீது புகார் அளித்ததால், அவரது நியமனத்திற்கு சி.எஸ்.ஐஆயரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நபர் தரப்பில், ‘தன் மீதான புகார் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. தடை விதிப்பது தொடர்பான உத்தரவை சி.எஸ்.ஐ யின் பிஷப் தன்னிச்சையாக எடுத்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாளாளரை தேர்வு செய்யும் விவகாரத்தில் சி.எஸ்.ஐயின் விதிகள் முறையாக பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. ஒரு சில நபர்கள் சி.எஸ்.ஐ நிர்வாகத்தின் விதிகளை பின்பற்றாமல் ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டுள்ளது தெரிய வருகிறது.
இதையும் படிங்க: “சோழர் காலத்தில் இருந்தே இருந்தாலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்” - உயர் நீதிமன்றம் கருத்து!
பல வழக்குகளில் ஆலய சொத்துக்கள் முறைகேடாக நிர்வாகம் செய்யப்படுவதும், நிதி தவறாக பயன்படுத்தப்படுவதும் தெரிய வருகிறது. இந்தச் சிக்கலைத் தணிக்க, அவ்வப்போது தற்காலிக நடவடிக்கையாக நிர்வாகிகளை நியமிப்பது வழக்கமான நடைமுறையாகும். ஆனால், நிரந்தர தீர்வு காண வேண்டிய நேரம் இது என்று நீதிமன்றம் கருதுகிறது. கிறித்தவ நிறுவனங்கள், கல்வி, மருத்துவமனை போன்ற பல பொதுப் பணிகளைச் செய்து வருகிறது என்பதை மறந்துவிட முடியாது.
இந்நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் நிதி பாதுகாக்கப்பட வேண்டும். இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களின் அறக்கட்டளைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டவை. ஆனால், கிறிஸ்தவர்களுக்கு அத்தகைய விரிவான ஒழுங்குமுறை எதுவும் இல்லை. கிறித்தவ நிறுவனங்களை மேலும் பொறுப்புடன் செயல்பட வைக்க, நிர்வாகத்தின் விவகாரங்களை ஒழுங்கமைக்க ஒரு சட்டப்பூர்வ வாரியம் இருக்க வேண்டும்.
ஆகவே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயலர் மற்றும் தமிழக அரசின் முதன்மை செயலரை நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கில் சேர்க்கிறது. கிறிஸ்தவ நிறுவனங்களை முறைப்படுத்த சட்டப்பூர்வ வாரியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக இரு தரப்பிலும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ஆம் தேதி ஒத்திவைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்