மதுரை: மாஞ்சோலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்கால தடை விதிப்பதோடு, வனத்துறை மாஞ்சோலை பகுதி முழுவதையும் கையகப்படுத்தி வனமாகவே பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மதுரையைச் சேர்ந்த வைகைராஜன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “களக்காடு முண்டத்துறை புலிகள் சரணாலய பகுதி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. யானை, புலி, சிறுத்தை, 2 ஆயிரத்து 250 வகை தாவரங்கள், 46 மீன் வகைகள், 19 வகை பாலூட்டிகள், 337 வகை பறவைகளுக்கு இருப்பிடமாக இந்த பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியிலேயே மாஞ்சோலை அமைந்துள்ளது.
மேலும், மாஞ்சோலை டீ எஸ்டேட் பகுதியில் ஒரே பயிர் பயிரிடப்படுவதால், இப்பகுதியில் சூழல் மாறுபடுகிறது. இங்கு பயன்படுத்தப்படும் வேதி உரங்களால் இயற்கைச் சூழல் பாதிக்கப்படுகிறது. தற்போது பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் லிமிடெட் முன்கூட்டியே தொழிற்சாலையை மூட முடிவெடுத்துள்ளது. மாஞ்சோலை பகுதி மக்களின் நலன் தொடர்பாக ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் அப்பகுதி மக்களை வெளியேற்ற தடை விதித்துள்ளது.
ஆகவே, மாஞ்சோலை தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை மாஞ்சோலை பகுதியை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க இடைக்கால தடை விதிப்பதோடு, வனத்துறை மாஞ்சோலை பகுதி முழுவதையும் கையகப்படுத்தி வனமாக பராமரிக்கவும் உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி விஜயகுமார் அமர்வு, மாஞ்சோலை தொடர்பான வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மைவி3 ஆட்ஸ் நிறுவன சக்தி ஆனந்தன் ஜாமீன் மனு தள்ளுபடி! - Myv3 Ads sakthi anandhan