மதுரை: சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாரி, உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், "பாப்பாகுடி கிராமத்தில் தனியார் பட்டா நிலங்களில் அனுமதியின்றி சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது. கனக ரக இயந்திரங்கள் மூலம் 10 அடி ஆழத்திற்கும் மேல் மணல் அள்ளி லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு கொண்டு செல்கின்றனர்.
இதனால், விவசாயப் பணிகளும் மற்றும் நீர் நிலைகளும் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, பாப்பாகுடி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் அள்ளத் தடை விதிக்க வேண்டும். மேலும், ராமேஸ்வரம் - மதுரை சாலையில் திருப்பாசேத்தி டோல்கேட் சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்குமாறும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள், திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் ஜனவரி மாதம் 23-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வரை பதிவான சிசிடிவி காட்சிகளை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய காரைக்குடி திட்ட இயக்குநர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, நீதிபதிகள் கிருஷ்ண குமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அமர்வு முன்பு இந்த மனு இன்று (பிப்.26) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், மனுதாரர் புகாரின் அடிப்படையில் கணிமவளத்துறை துணை இயக்குநர் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்ததில் 3 சர்வே எண்களில் 20 ஆயிரத்து 144 கியூபிக் மீட்டர் அளவுக்கு சட்டவிரோதமாக மண் அள்ளப்பட்டுள்ளது. இதற்காக சட்டப்படி அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், சட்டவிரோதமாக அள்ளிய மணலை லாரிகளில் கொண்டு சென்றது தொடர்பாக டோல்கேட்டில் ஜனவரி மாதம் 31-ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வரை பதிவான காட்சிகளைக் கொண்ட ஹார்ட்டிஷ்க்கை டோல்கேட் தரப்பினர் உடனடியாக மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்.
இதுமட்டும் அல்லாது, இந்த காட்சிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, பதிவாகியுள்ள காட்சியில் உள்ள லாரிகளின் உரிமையாளர்களிடம் விசாரிக்க வேண்டும். மனுதாரரும் மாவட்ட ஆட்சியர் முன்பு ஆஜராகி கூடுதல் ஆவணங்கள் இருந்தால் வழங்கலாம். மேலும், விசாரணை தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்ய வேண்டு என்று உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை மார்ச் 6-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதையும் படிங்க: கீழடியில் மேற்கொண்ட அகழாய்வு குறித்த அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும் - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!