சென்னை: ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையுடன், தமிழ்நாடு அரசின் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம், சேப்பியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து உணவில் உப்பை குறைக்க வேண்டியதன் அவசியம் குறித்து கருத்தரங்கை நடத்தியது.
இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கலந்து கொண்டு உணவில் குறைந்த உப்பு பயன்பாடுகள் குறித்தும், உணவில் அதிகளவில் உப்பு உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறியதாவது, “தொற்றா நோய்களான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்கள், ‘மக்களைத்தேடி மருத்துவம்’ மூலமாக கண்டறிந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இளம் வயதில் இருந்தே உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும்.
இதனால் ரத்தக்குழாய் பாதிப்புகள், எலும்பு தேய்மானம், சிறுநீரக பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உணவில் அதிகளவில் உப்பு சேர்க்கும் போது அது சிறுநீர் மூலம் வெளியேறும். அப்போது கால்சியம் சத்தும் இணைந்து வெளியேறும். இதனால் எலும்பு பாதிப்பும் ஏற்படும்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை சார்பில், உணவு உற்பத்தி நிறுவனங்களுக்கு லேபிலிங் செய்து விற்பனை செய்ய முறையாக அறிவுறுத்தப்பட்டுள்ளது .மேலும், உணவு பாக்கெட்டுகளில் உப்பு சேர்க்கப்பட்டுள்ள அளவையும் பதிவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் துறை பேராசிரியர் கிருஷ்ணகுமார் பேசுகையில், “உப்பு அதிகமாக எடுத்துக் கொள்வதால் இரத்தக்குழாயில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அடைப்புகள் ஏற்படுகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் உப்பை பயன்படுத்தும் அளவைக் குறைக்க வேண்டும். உடலில் உள்ள உப்பின் அளவை பொறுத்து ரத்தக்கொதிப்பு அதிகரிக்கிறது.
மனித உடலில் இருந்து உப்பு வெளியேறும் பொழுது எலும்பிற்குத் தேவையான கால்சியம் சத்தையும் எடுத்துக் கொண்டு செல்கிறது. தற்பொழுது ஏற்பட்டுள்ள வாழ்க்கை முறை மாற்றத்தால் 25 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு நீரிழிவு நோய் வருகிறது. உப்பின் அளவை 25 வயது முதல் குறைக்க ஆரம்பித்தால் நல்லது. இளம் வயது முதல் உப்பின் அளவை குறைக்க பழகிக் கொள்ள வேண்டும்” இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து மருத்துவர் ராஜன் ரவிச்சந்திரன் ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்பு பேட்டியில், “உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யப்பட்ட உப்பின் அளவைவிட 2 அல்லது 3 மடங்கு அதிகமான உப்பை நாம் உட்கொள்கிறோம். உப்பு அதிக அளவில் சாப்பிடும் பொழுது ரத்தக்குழாயில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதம், மாரடைப்பு (Heart Attack), சிறுநீரக பாதிப்பு போன்றவைகளும் வருகின்றன. எனவே, உப்பைக் குறைக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும்.
உப்பை குறைக்க 3 வழிமுறைகள்:
- உணவினை சமைக்கும் பொழுது உப்பின் அளவினை குறைக்க வேண்டும்.
- உணவு உட்கொள்ளும் பொழுது கூடுதலாக உப்பு சேர்த்துக் கொள்ளக்கூடாது.
- பாக்கெட்டில் அடைக்கப்பட்டு வரக்கூடிய உணவுப் பொருள்களில் உப்பின் அளவு அதிகமாக இருக்கும். எனவே, அதனையும் தவிர்க்க வேண்டும்.
இந்தியாவில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் மீது உள்ள லேபிளின் அளவு சிறியதாக இருக்கிறது. உப்பின் அளவு குறித்தும் எழுதுவதில்லை. மேலும், தமிழ் மொழியிலும் அது இருப்பதில்லை. அதனால் உப்பின் அளவை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
குறியீடு: சிவப்பு நிறத்தில் இருந்தால் உப்பு அதிகமாகவும், மஞ்சள் நிறத்தில் உப்பு நடுநிலையுடனும், பச்சை நிறத்தில் இருந்தால் உப்பு குறைவாக இருக்கும். அதனை உட்கொள்ளலாம். உப்பின் அளவை குறிப்பிடுவதற்குப் பதிலாக குறியீடுகளை வெளியிடும் வகையில் லேபிள் அமைக்க வேண்டும்.
உப்பு அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள்: உப்பு அதிக அளவில் சாப்பிடும் பொழுது ரத்தக்குழாய் பாதிக்கப்பட்டு இருதயம் பாதிக்கப்படும். பக்கவாதம், சிறுநீரக பிரச்னையும் ஏற்படும். திடீரென நெஞ்சு வலி ஏற்படும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஒரு நாளைக்கு 5 கிராம் உப்பு மட்டுமே சாப்பிட வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: அதிகரித்து வரும் கல்லீரல் கொழுப்பு நோய்.. மருத்துவர்கள் கூறுவது என்ன?