சென்னை: சிஐடி நகர் பகுதியில் மழைக்கால நோய்கள் முன்னெச்சரிக்கை சிறப்பு மருத்துவ முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா சுப்பிரமணியன், "தமிழ்நாட்டில் ஒவ்வொரு பருவமழைக்கும் முன்னதாக, பருவமழை காரணங்களால் ஏற்படுகிற நோய் பாதிப்புகள் கண்டறிந்து அவற்றுக்கு சிகிச்சையளிக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை, தென்மேற்கு பருவமழை என்று ஒவ்வொரு பருவமழையின்போதும் ஏற்படக்கூடிய பாதிப்புகளின் தொடர்ச்சியாக கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக மழைக்கால நோய் பாதிப்புகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கிறது. கடந்த ஆண்டை பொருத்தவரை அக்டோபர் முதல் டிசம்பர் இறுதி வரை பத்தாயிரம் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் என 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு மிகப்பெரிய அளவிலான நோய் பாதிப்புகள் கட்டுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு: 2017 பொறுத்தவரை தமிழ்நாட்டின் அதிகமாக டெங்கு பாதிப்பு என்கின்ற வகையில் 23 ஆயிரத்து 294 பேருக்கு ஒரே ஆண்டில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு 65 பேர் மரணம் அடைந்தார்கள். அதேபோல் 2012 ஆம் ஆண்டில் 66 பேர் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலை இருந்தது. அந்த வகையில் தொடர்ந்து 60, 70 பேர் உயிரிழப்பு இருந்து வந்த நிலையில், உள்ளாட்சி நிர்வாகங்கள், ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி ஆகிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து மக்கள் நல்வாழ்வுத்துறை தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிற காரணத்தினால் டெங்கு பாதிப்பினால் ஏற்படுகிற உயிரிழப்புகளும் கட்டுக்குள் இருந்து வருகிறது.
தமிழகத்தில் பரவி வரும் மழைக்கால நோய்கள்: தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழையால் ஏற்படுகிற நோய் பாதிப்புகள் டெங்கு, உன்னி காய்ச்சல், எலி காய்ச்சல், மஞ்சள் காமாலை மற்றும் இன்புளூயன்சா (influenza) காய்ச்சல் போன்ற காய்ச்சல் பாதிப்புகள் தொடர்ந்து கண்டறியப்படும் பணிகளை மக்கள் நல்வாழ்வு துறையும் தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளும் தொடர்ந்து செய்து வருகின்றன.
அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு: சென்னை, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு பொதுவாகவே அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அதைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை துறை மேற்கொண்டு வருகிறது. கடலூர், சென்னை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உன்னி காய்ச்சல் கண்டறியப்பட்டு இருக்கிறது. எலி காய்ச்சலை பொருத்தவரை சென்னை, கன்னியாகுமரி, திருவள்ளூரில் எலி காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது.
மஞ்சள் காமாலை சென்னை, திருச்சி, தேனி போன்ற பகுதிகளில் மஞ்சள் காமாலை பாதிக்கப்படுபவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்புளூயன்சா பாதிப்புகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 1 தொடங்கி நேற்று வரை டெங்கு பாதிப்பு என்பது தமிழகத்தில் 6,565 ஆக உள்ளது.
390 பேர் பன்றிக்காய்ச்சலாலும், 1,481 பேர் எலிக்காய்ச்சலாலும், 1,750 பேர் மஞ்சள் காமாலையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்களால் இதுவரை உயிரிழப்புகள் எதுவுமே இல்லை. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையை அணுகாததன் காரணமாக அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து மூன்று பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மருத்துவ முகாம்கள்: பருவநிலை மாற்றங்களின்போது ஏற்படுகிற பாதிப்புகளுக்கு மருத்துவ முகாம்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை 476 நடமாடும் மருத்துவ குழுக்கள் தமிழகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. 805 நடமாடும் பள்ளி மருத்துவக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
2,972 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிடம் இருந்து காய்ச்சல் கண்டறிந்தவர்கள் தொடர்பான அறிக்கை பெறப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைத்து கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கென 22,384 தற்காலிக பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். 16 ஆயிரத்து 5 புகை மருந்து அடிக்கும் இயந்திரங்கள் உள்ளன. இவற்றுக்கு தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளன.
சென்னையில் அனைத்து துறை செயலாளர் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது" அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்