சென்னை: சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் இஸ்லாமியப் பெண் ஒருவர் புகார் கொடுக்க சென்றிருந்த நிலையில், அவர் அணிந்திருந்த புர்காவை கழற்றச் சொல்லியும், தரக்குறைவாகப் பேசிய காவலரைப் பணியிடை மாற்றம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது இரு சக்கர வாகனம் திருடப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் அந்தப் பெண்ணே சிசிடிவி காட்சிகள் மூலமாகத் தனது இரு சக்கர வாகனம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்து காவல்துறையிடம் தெரிவித்ததால் போலீசார் அந்த வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தை அந்தப் பெண்ணிடம் ஒப்படைக்காமல் வழக்குப் பதிவு செய்து விட்டதால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அந்த இரு சக்கர வாகனத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு தலைமைக் காவலர் வேல்முருகன் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், காவலருக்கும் புகார் அளித்த அந்தப்பெண்ணுக்கு வாய்ப்போர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகராற்றில், "பர்தா அணிந்து காவல் நிலையத்திற்கு வரக்கூடாது" என்றும் அந்தப்பெண்ணைத் தரக்குறைவான சொற்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
இது குறித்து, அப்பெண் புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை ஆணையர் ஈஸ்வரனிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், தலைமைக் காவலர் வேல்முருகன் பேசியது நிரூபணமான நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, துறை ரீதியான விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: உபி டிராக்டர் விபத்து: பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு! விபத்துக்கு இதுதான் காரணமா?