மதுரை: தமிழகத்தில் நடத்தப்படும் கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், வரவு செலவு கணக்குகள் உள்ளிட்ட முழு நிகழ்வுகளையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவிட கோரி திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நபர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இதனை இன்று (ஏப்.15) விசாரித்த நீதிபதிகள், கிராம சபை கூட்டத்தை வீடியோ பதிவு செய்வது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க வேண்டும் என கூறி உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த குருநாதன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “தமிழகத்தில் அனைத்து கிராமத்திலும் கிராம சபை கூட்டம் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சிக்கு உட்பட்ட வரவு செலவு கணக்குகள் மற்றும் அடிப்படைத் தேவைகள், தீர்மானங்கள் மற்றும் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கூட்டம் நடைபெறும்.
இதுபோன்று நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தை வீடியோ பதிவு செய்து அதனைப் பஞ்சாயத்து நிர்வாகம் இணையதளத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் இதுபோன்று எந்த ஒரு வீடியோ பதிவும் செய்யாமல் வருடம் தோறும் 4 நாட்கள் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூட்டத்தின் போது சர்ச்சைகள் எழும்பினால் அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும், ஆனால் அது போன்று செய்யாமல் சமரசம் பேசி முடித்துக் கொள்கின்றனர்.
வருடம் தோறும் நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தின் போது ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக வீடியோ பதிவு செய்து அதனை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரி பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தமிழகத்தில் நடத்தப்படும் கிராம சபை கூட்டத்தை முறையாக வீடியோ பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்”, என கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் அருள் முருகன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிராம சபை கூட்டத்தின் போது கூட்டத்தை முழுமையாக வீடியோ பதிவு செய்வது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறது என தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, வழக்கு குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: அண்ணாமலையை சூழ்ந்த போலீசார்..சூலூரில் அண்ணாமலை உள்பட 300 பேர் மீது வழக்குப்பதிவு - Lok Sabha Election 2024