மதுரை: மதுரையைச் சேர்ந்த கண்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், கடந்த மார்ச் 28ஆம் தேதி குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) வெளியிட்டது. முதல் நிலை தேர்வு ஜூலை 13 ஆம் தேதி நடைபெற்றது. அதற்கான தற்காலிக விடைக்குறிப்பு ஜூலை 23ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் ஏதேனும் ஆட்சேபனை இருப்பின் 7 நாட்களுக்கு உள்ளாக குறிப்பிடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மொழிபெயர்ப்பில் உள்ள தவறுகளை குறிப்பிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. 6 வினாக்களில் மொழி பெயர்ப்பு தவறுகள் இருந்ததால், அதுதொடர்பாக நடவடிக்கை கோரி மனு அளித்திருந்தேன். இருப்பினும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே குரூப் 1 தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதிப்பதோடு, 6 வினாக்களுக்கும் சலுகை மதிப்பெண் வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என கண்ணன் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்ரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல தேர்வுகளுக்கு இதுவரை இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடவில்லை. நீதித்துறை தேர்வுகளுக்கு கூட இறுதி குறிப்புகள் வெளியிடப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் மீதான அமலாக்கத்துறை வழக்கு ரத்து! - ED Case Quashed