சென்னை: அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எச்.ராஜா கூறியது, “கடவுள் இருக்கான் குமாரு என்று சொல்வது போல, ஒரு வாரத்தில் இப்படி நடக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நாமக்கல் கவிஞர் மாளிகையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்போது, 'திராவிடநல் திருநாடு' என்று சொல் விட்டுப்போச்சு. மீண்டும் பாடச் சொன்னதில் சில வரிகள் விட்டுப் போய்விட்டது.
ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தூர்தர்ஷன் பணியாளர்கள் செய்தது சிறிய தவறு. முதலமைச்சர் அதற்கு சாயம் பூசி எக்ஸ் தளத்தில் பதிவு போடுகிறார். முதலமைச்சர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? அவருடைய மகன் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட உங்களுக்கு துப்பு இல்லையா? நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் (திமுக) எறிகின்ற பந்து மீண்டும் உங்களை வந்து தாக்கும்.
இதையும் படிங்க: அமைச்சர் பொன்முடியின் 'திராவிட இயக்கமும் - கருப்பர் இயக்கமும்' நூல் வெளியீடு!
இதன் பிறகு உதயநிதிக்கு புத்தி வர வேண்டும். உதயநிதி மேடையில் சொல்ல முடியாத வார்த்தைகளை எல்லாம் பேசியுள்ளார். தமிழக மக்கள் நன்றாக புரிந்துள்ளார்கள். தமிழகத்திற்கு ஆளுநர் மாதிரி ஆட்கள் தேவைப்படுகிறார்கள். பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பாஜகவில் தீவிர உறுப்பினர் என்று சொல்பவர்கள், 50 உறுப்பினர்களை இதில் சேர்க்க வேண்டும்.
நவம்பர் 11ஆம் தேதியிலிருந்து 30ஆம் தேதி வரை அனைத்து கிளைகளுக்கும் தலைவர் நிர்வாகக் குழு அமைக்கப்படும். இதில் மூன்று பேர் பெண்களாக இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். பெண்ணுரிமை என்று பேசுபவர்கள் கட்சியில் கூட இவ்வாறு இல்லை. ஆனால், பாஜகவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று சொன்ன முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலினை பதவி நீக்கம் செய்யுங்கள், வீட்டிற்கு அனுப்புங்கள். மனுநீதி சோழனைப் போல நீங்கள் உங்கள் மகனை பதவி நீக்கம் செய்யுங்கள்'' என எச்.ராஜா கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்