சென்னை: சென்னை ரிசர்வ் வங்கி வளாகத்தில் பெண் காவலரின் துப்பாக்கி திடீரென வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை ராஜாஜி சாலையில், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (RBI) உள்ளது. இந்த வங்கி எப்போதும் பலத்த பாதுகாப்புடன் செயல்பட்டு வரும். எனவே, வங்கியைச் சுற்றி எப்போதுமே போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பர். இந்த நிலையில், இன்று அதிகாலை ரிசர்வ் வங்கி வளாகத்தினுள் அலாரம் ஒலி அடித்துள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்து ஆயுதப்படை பெண் காவலர் ஒருவர், பாதுகாப்பு பணிக்கு வைத்திருந்த துப்பாக்கியில் தோட்டாவை லோட் செய்து உள்ளார்.
இதையும் படிங்க: விக்கிரவாண்டி தவெக மாநாடு: கட்-அவுட் முதல் 100 அடி கொடி வரை.. சிறப்பு ஏற்பாடுகள் குறித்த அப்டேட்
இதையடுத்து, அவர் பாதுகாப்பில் இருந்த பகுதி முழுவதும் சோதனை செய்தபோது, அங்கு அத்துமீறி யாரும் வரவில்லை. மேலும், அலாரம் தானாகவே ஒலித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, துப்பாக்கியில் லோடு செய்யப்பட்ட தோட்டாவை காவலர் வெளியே எடுக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி வெடித்து குண்டு வெளியே பாய்ந்து உள்ளது.
இதையடுத்து, அந்த துப்பாக்கி குண்டு அருகாமையில் உள்ள சுவற்றின் மீது பாய்ந்ததால், யாருக்கும் எந்தவித காயமும், பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்குச் சென்று துப்பாக்கி வெடித்ததற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்