சென்னை: திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திர குமார் (30). இவர் செவ்வாய்பேட்டை சிடிஎச் சாலையில் எலக்ட்ரிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவரது வீட்டிற்கு சிந்தாதிரிப்பேட்டை ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து வந்த நோட்டீஸில் மகேந்திர குமார் 22 கோடியே 29 லட்சத்து 29 ஆயிரத்து 722 ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையாக கட்ட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த மகேந்திர குமார் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர், வழக்கறிஞர் மூலம் ஜி.எஸ்.டி கணக்கில் வழங்கப்பட்டிருந்த விவரங்களை சேகரித்தார். அதில் பான் கார்டு எண் மகேந்திர குமார் உடையதாகவும், வங்கிக் கணக்கு எண் மற்றோறு நபரினுடையதாகவும் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் மகேந்திர குமாரின் பான் கார்டு எண்ணை வைத்து ஜி.எஸ்.டி கணக்கு உருவாக்கி அதில் மோசடி நடந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, ஆவடி காவல் ஆணையரகத்தில் மகேந்திர குமார் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
இதையும் படிங்க: ரூ.6 கோடி அளவுக்கு மணல் கொள்ளை? ட்ரோன் காட்சிகளுடன் புகார்.. புதுக்கோட்டையில் அரசின் நடவடிக்கை என்ன?
அதில், "நான் 2017ஆம் ஆண்டு சென்னை ஜி.கே.எம் காலனியில் உள்ள மொபைல் ஷாப் ஒன்றில் வேலை செய்து வந்தேன். சம்பளம் பத்தாததால் 2019ஆம் ஆண்டு அங்கிருந்து நின்று விட்டேன். அதனை அடுத்து, நான் பணிக்கு சேர்ந்த போது மொபைல் கடையில் கொடுத்த பேன் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வைத்து போலியாக ஜி.எஸ்.டி கணக்கு உருவாக்கி அதில் வர்த்தகம் செய்துள்ளனர்.
இதனால் எனது பெயரில் 22 கோடியே 29 லட்சத்து 29 ஆயிரத்து 722 ரூபாய் ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை உள்ளதாகவும் அதனை கட்டும்படியும் கடிதம் வந்துள்ளது. எனவே, எனது பான் கார்டை வைத்து ஜி.எஸ்.டி கணக்கில் மோசடி செய்த மொபைல் ஷாப் ஓனர் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஆவடி காவல் ஆணையரகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்