சிவகங்கை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கி மக்களை வாட்டி வதைத்து வரும் வேளையில், மக்கள் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதற்கு அரசும், மருத்துவர்களும் பல்வேறு அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காகச் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், காரைக்குடி சிக்னல்களில் இன்று வாகன ஓட்டிகளின் வசதிக்காக பசுமை பந்தல் திறக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி பெரியார் சிலை பகுதியில் உள்ள போக்குவரத்து சிக்னல் வழியாக புதிய பேருந்து நிலையம், செக்காலை ரோடு , கல்லூரி சாலை, முத்துமாரியம்மன் கோவில் செல்லும் சாலை என நான்கு சாலை சந்திப்பு உள்ளது. இதில் வாகன ஓட்டிகள் 30 வினாடிகள் முதல் 90 வினாடிகள் வரை நிற்க வேண்டிய சூழல் உள்ளது.
தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து இருப்பதால் சிக்னல்களில் நிற்கும்போது வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இதனால் காரைக்குடியில் உள்ள அறக்கட்டளை முயற்சியில் தனியார் சிட் ஃபண்ட் நிதி பங்களிப்புடன் மூன்று பகுதிகளில் பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
பசுமை பந்தலை காரைக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ்இன்று (மே 10) திறந்து வைத்தார். இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கு தனியார் அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை நிர்வாகி விமல் பேசுகையில், "கடந்த ஆண்டுகளைவிட காரைக்குடியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அவர்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக எங்கள் அறக்கட்டளை மூலமாக பசுமை நிழல் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
எல்லாமே அரசே செய்ய வேண்டும் என்று இல்லை. அமைக்கப்பட்டுள்ள பந்தலால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வெயிலை நம்மால் குறைக்க முடியாது ஆனால் வெயிலின் தாக்கத்தை குறைக்க முடியும் என்பதற்காக மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.