சென்னை: உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவர் மீது விதிக்கப்பட்டு இருந்த தண்டனையை நிறுத்தி வைப்பதாக மார்ச் 11ஆம் தேதி அறிவித்தது. அதோடு, பொன்முடி திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ-வாக தொடரலாம் எனவும் சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். மேலும், அரசிதழிலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனையடுத்து அவருக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கக் கோரி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முறையாக கடிதம் அனுப்பியிருந்தார். ஆனால், ஆளுநர் ஆர்.என்.ரவி, இதனைப் புறக்கணிக்கும் விதமாக டெல்லி பயணம் மேற்கொண்டார். இதனிடையே, அமைச்சராக பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனால், தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அளித்த மனு, தலைமை நீதிபதி சந்திர சூட் முன்பு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆளுநர் தரப்பில் ஆஜாராகிய அட்டார்னி ஜெனரல், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதே தவிர, அவர் நிரபராதி என நீதிமன்றம் எனக் கூறவில்லை எனவும் ஆகவே, அவரை அமைச்சராக்குவது சரியான முடிவாக இருக்காது என வாதிட்டார். இது தொடர்பாக அவர் மறுப்பு தெரிவித்து, தமிழ்நாடு அரசுக்கு கடிதமும் அனுப்பியுள்ளார் எனக் கூறினார்.
அப்போது, 'குற்றவாளி' என்ற தீர்ப்பை நிறுத்திவைத்தப் பிறகும் கூட, பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துவைப்பது எப்படி அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என ஆளுநர் எப்படி கூறமுடியும்? எனவும் ஆளுநரின் அரசியலமைப்பு சட்டத்தை மீறும் நடவடிக்கையை கண்டு ஏன் உச்சநீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் எனவும் தலைமை நீதிபதி சந்திரசூட் கடுமையான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
மேலும் இது தொடர்பாக, சாதகமான தகவல் கிடைக்காவிடில், அரசியலமைப்பு சட்டத்தின்படி நடந்து கொள்ள வேண்டுமென ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும். ஆனால், இதனை தவிர்க்கவே நீதிமன்றம் விரும்புகிறது. ஆகவே, இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு இரவு முழுவதும் கால அவகாசம் அளித்து அரசியலமைப்பு சட்டத்தை நிலைநிறுத்த உச்சநீதிமன்றம் விரும்புவதாகவும், அதற்குள் தமிழ்நாடு ஆளுநர் அரசியலமைப்பு சட்டப்படி நடந்து கொள்ள வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
மேலும், ஆளுநர் உச்சநீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகவும், பொன்முடி குற்றவாளியல்ல என ஆளுநருக்கு பாடம் நடத்த முடியாது எனவும், ஆளுநரின் இந்த விவகாரம் கவலையளிப்பதாகவும் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எந்தவொரு ஆளுநரும் இப்படியெல்லாம் விளக்கம் அளிக்க முடியுமா எனக் கேள்வியெழுப்பியதோடு, இந்த உத்தரவை மதித்து அடுத்தக்கட்ட சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து, திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடிக்கு மீண்டும் பதவியேற்க பொன்முடிக்கு அமைச்சராக பதவியேற்க தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பொன்முடி நியமனம்
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரின் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'தமிழ்நாடு முதலமைச்சரின் பரிந்துரையை ஏற்று தமிழ்நாடு ஆளுநர், பொன்முடியை அமைச்சாரக மாலை 3.30 மணிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அவருக்கு உயர்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியத்துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ஆர்.எஸ். ராஜாகண்ணப்பன் நியமனம் செய்து ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இன்று 22.3.2024 பிற்பகல் 3.30 மணிக்கு நியமிக்கப்பட்ட அமைச்சரின் பதவியேற்பு விழா சென்னை ராஜ்பவனில் நடைபெறுகிறது' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொன்முடி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஆளுநருக்கு சரமாரி கேள்வி.. காரசாரமான முழு வாதம்! - Ponmudi Minister Inauguration Issue