சென்னை: தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரி சங்கர் ஆகியோர் நிதித்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தமிழ்நாடு அரசுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் - அரசுப் பணியாளர்களுக்கு IFHRMS என்ற மென்பொருள் மூலமாக சம்பளப் பட்டியல்கள் பெறப்பட்டு, மாதாந்திர சம்பளம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.
இதில், புதிய நடைமுறையாக இந்த நிதியாண்டு முதல், வருமான வரிப் பிடித்தமானது ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மென்பொருள் (IFHRMS) மூலமாக கணக்கிட்டு பிடித்தம் செய்யப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதில், பணியாளர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில், பழைய நடைமுறை அல்லது புதிய நடைமுறை (Old Regime / New Regime) எனத் தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டனர். இதனைத் தேர்வு செய்யாத பணியாளர்களுக்கு New Regime என்ற அடிப்படையில் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இந்த நடைமுறையில் பணியாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்பது தான் யதார்த்தம். தாங்கள் தேர்வு செய்த விருப்பத்தின் அடிப்படையில், வருமான வரிப் பிடித்தம் செய்யாமல், அளவுக்கு அதிகமாக சில பணியாளர்களுக்கு அனைத்து பிடித்தங்களையும் கழித்துவிட்டு, அவர்கள் வாங்கும் மாதாந்திர ஊதியத்தினை விட அதிகமாக வருமான வரிப் பிடித்தம் செய்யும் நிலை எழுந்துள்ளது.
வரி விலக்கு பெற்ற பல்வேறு இனங்களை, உதாரணமாக வீட்டுக் கடன் அசல், வட்டி உள்ளிட்டவற்றைக் கூட பதிவேற்றம் செய்வதற்கான உரிய வசதிகள் IFHRMS மென்பொருளில் செய்யப்படவில்லை. இதுநாள் வரை, இனிமேலும் வருமான வரிப் பிடித்தம் செய்யும் வரம்பிற்குள் வராத அடிப்படைப் பணியாளர்களுக்குக் கூட அதிக அளவில் வருமான வரிப் பிடித்தம் செய்யப்படும் நிலை உருவாகி உள்ளது.
பல்வேறு பணியாளர்கள் வீட்டுக் கடன் உள்ளிட்ட தனிப்பட்ட வங்கிக் கடன்களை மாதாந்திரத் தவணையில் செலுத்தும் நிலையில் உள்ளனர். இவ்வாறு மென்பொருளானது எதையும் கருத்தில் கொள்ளாமல், எந்த அடிப்படையுமின்றி பிடித்தம் செய்தால், அவர்கள் மாதாந்திர தவணையினைக் கட்டுவதற்கு அவர்களது வங்கிக் கணக்கில் உரிய தொகை இருக்காது.
துறைகளில் பட்டியல் பிரிவில் பணியாற்றும் பணியாளர்கள் IFHRMS மென்பொருள் இப்பணிகளைச் செய்வதில் அவர்களால் உரிய சம்பளப் பட்டியலைத் தயாரிக்க இயலாத சூழ்நிலையில் உள்ளனர். மேலும், தங்களது மாதாந்திர வருமான வரிப் பிடித்தத்திற்கு மிகையாக, மிக அதிகமாக தற்போது IFHRMS மென்பொருள் மூலமாக பிடித்தம் செய்யப்பட்டால், அத்தொகையினை மீளப் பெறுவதற்கு இரண்டாண்டுகளுக்கு மேலாகும். இதனால், கடுமையான நிதி நெருக்கடிக்கு பணியாளர்கள் ஆட்படுவார்கள்.
அரசுப் பணியாளர்களைப் பொறுத்தவரையில், தங்களது ஊதியத்திற்கு ஏற்ற வருமான வரியினை முழுமையாகச் செலுத்தக்கூடியவர்கள். கடந்த ஆண்டில் பணியாளர் செலுத்திய வருமான வரித் தொகையினை அடிப்படையாகக் கொண்டு, அத்தொகையினைப் பத்தால் வகுத்து, அதனை மாதாந்திர வருமான வரிப் பிடித்தம் மேற்கொள்வதே சரியான நடவடிக்கையாக அமையும்.
எனவே, உடனடியாக IFHRMS மென்பொருள் மூலமாக வருமான வரிப் பிடித்தத்தினை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தினைக் களைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, உரிய வருமான வரியினை மட்டுமே பிடித்தம் செய்து, இந்த மாதச் சம்பளத்தினை பணியாளர்கள் சிரமமின்றிப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: “சொந்த கட்சியிலே சாதியப் பாகுபாடு” - நெல்லை வார்டு கவுன்சிலரின் ராஜினாமா கைவிடப்பட்டதன் பின்னணி என்ன? - Nellai Councilor Resign Issue