விருதுநகர்: சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ மத்திய சேனை,மேல சின்னையாபுரம், வி.சொக்கலிங்கபுரம், சிவகாசி சிலோன் காலனி,
நேருஜி நகர், இந்திரா நகர், பாறைப்பட்டி, அய்யம்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அதன்பின் சிவகாசி அரசு மருத்துவமனைகள் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த துரை வைகோ கூறியதாவது," விருதுநகர் மாவட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பட்டாசு தொழிலை நம்பி உள்ளனர். வேறு வேலை வாய்ப்புகள் இல்லாததால் ஆபத்தான இந்த தொழிலில் உயிரைப் பணயம் வைத்து பட்டாசு உற்பத்தி செய்கின்றனர்.
பட்டாசு ஆலைகளில் விபத்துக்களைத் தடுக்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நல்ல சட்டங்களைக் கொண்டு வந்து, விதிகளைக் கடுமையாக்கி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் ராமுதேவன் பட்டியில் நடந்த விபத்தில் 13 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அந்த தொழிலாளர்களின் குடும்பத்தினரையும், காயம் அடைந்தவர்களையும் நேரில் சந்தித்தேன். அரசின் சட்டங்கள் மற்றும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது ஆலை உரிமையாளர்களின் கடமை. முதலமைச்சர் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் விபத்து குறித்து ஆராயக் குழுவை அமைத்துள்ளார்.
தற்போது பட்டாசு தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் நிலையில் சிலர் செய்யும் தவறுகளால், நேர்மையாகத் தொழில் செய்பவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. கடந்த 5 மாதத்தில் நடந்த 11 விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.
விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலை மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயம் வேண்டும் என்றார். இந்த விபத்தில் ரே குடும்பத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல் 5 வயதுக் குழந்தைகள் அவர்களது தாய்,தந்தை இருவரையும் இழந்து உள்ளனர் இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.
கூடுதலாக லாபம் சம்பாதிப்பதற்காக அதிக தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்வதால் விபத்து ஏற்படுகிறது. 90 சதவீதம் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 10 சதவீதம் பேர் சட்ட விரோதமாகச் செயல்படுவதால், உயிரிழப்புகள் ஏற்பட்டு, பட்டாசு தொழிலுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: சவுக்கு சங்கர் விவகாரம்: "எனது கணவரை மீட்டு தாருங்கள்" யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி மனு!