திருச்சி: திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, வியட்நாம், தோஹா, உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட முக்கிய ஊர்களுக்கும் உள்நாட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சிங்கப்பூரில் இருந்து வரும் பயணிகள் தங்கம் கடத்தி வருவதாக விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. ரகசிய தகவலின் அடிப்படையில், விமான நிலையம் முழுவதும் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துள்ளனர்.
அப்போது, திருச்சி விமான நிலையத்திற்கு சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது, மூன்று ஆண் பயணிகள் தங்களது லேப்டாப்பில் மறைத்து வைத்து எடுத்து வந்த தங்க தகடுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், அவர்களிடமிருந்து தங்க கட்டி மற்றும் தங்கச் சங்கிலி ஆகியவற்றையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, மூன்று பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் எடை 390 கிராம் எனவும், அவற்றின் இந்திய ரூபாய் மதிப்பு 26 லட்சம் என தெரிய வந்துள்ளது.